உலகத் தொழிலாளர் தினமான இன்று இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் எதுவும் பேரணிகளை ஏற்பாடு செய்யவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.கிழக்குத் தேர்தல்கள், பாதுகாப்பு நிலவரங்கள் போன்றவற்றை கருத்திற் கொண்டு அரசாங்கமோ பிரதான எதிர்க்கட்சிகளோ இம்முறை பேரணிகளை ஏற்பாடு செய்யப்படவில்லை.
இன்றைய தொழிலாளர் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் 11 கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.வருடந்தோறும் மிக விமரிசையாக மே தினப் பேரணிகளை ஒழுங்கு செய்யும் ஜே.வி.பி.யும் இம்முறை பேரணி எதனையும் ஏற்பாடு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.கொழும்பு நகரசபை மண்டபத்தில் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தலைமையில் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
கூட்டத்தின் நிறைவின் போது மே தின விசேட கலைநிகழ்வுகள் நடைபெறவுள்ளன. கிழக்குத் தேர்தல் பிரசாரங்களுக்கு சமாந்திரமாக அரசாங்கத்தின் மே தினக் கூட்டம் இம்முறை தெஹிஅத்த கண்டியவில் நடைபெறவுள்ளது. கிழக்கை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டெடுக்க கிழக்கு மக்கள் நல்கிய ஒத்துழைப்புக்கு நன்றி பாராட்டும் வகையில் இம்முறை அம்பாறை மாவட்டத்தின் தெஹிஅத்த கண்டியவில் மேதினக் கூட்டத்தை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை கூட்டங்களையோää பேரணிகளையோ நடத்தவில்லை. மாறாக இம்முறை களனி ரஜ மஹாவிஹாரையில் விசேட மதவழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று முற்பகல் 9.00 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் களனி விஹாரையில் விசேட வழிபாடுகள் ஆரம்பமாகின.இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம் ஹட்டனில் நடைபெற்றுவருகின்றது.
இந்தப் பேரணி ஹட்டன் பிரின்சஸ் சந்தியில் முற்பகல் 11.30 அளவில் ஆரம்பமாகி பஸ் தரிப்பிடம் நட்சத்திர சதுக்கம் வரை சென்றதாகத் தெரியவருகிறது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, சோசலிச மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து இன்று மாலை 3.00 மணியளவில் கிருளப்பனையில் விசேட கூட்டமொன்றை நடாத்தவுள்ளன.
இதற்கான பேரணி நாரஹேன்பிட்டி சாலிகா மைதானத்தில் இன்று பிற்பகல் 1.00 மணியளவில் ஆரம்பாகியது.மேலக மக்கள் முன்னணியின் மே தினக் கூட்டமும் பேரணியும் பொகவந்தலவை நகரில் நடைபெறுகின்றது. இந்த கூட்டங்களுக்கு மேலக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.