கைத்துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்ட ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டப் பணியாளர் குறித்து உரிய விசாரணைகளுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கப்படுமென ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான மனிதநேய இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கிளிநொச்சிப் பிராந்தியப் பணியாளரான தியாகராஜா பிரபாகரன் என்பவரிடமிருந்து வவுனியா ஈரப்பெரியகுளம் சோதனைச்சாவடியில் பொலிஸார் சிறிய கைத்துப்பாக்கியொன்றை மீட்டிருந்ததுடன், அவரைக் கைதுசெய்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
“குறிப்பிட்ட பணியாளர் வேலை நேரம் முடிவடைந்த பின்னர் தனியான வாகனத்தில் பயணித்தபோதே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து அறிந்து கொண்டதும் ஐக்கிய நாடுகள் சபை வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்துள்ளது” என ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்தச் சம்பவம் குறித்த விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும்” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.