வடக்கு கிழக்கு இனப்பிரச்சினைக்கு யுத்தம் தீர்வாகாது. இனப்பிரச்சினை தீர்வுக்கு சமாதானப் பேச்சுவார்த்தையே சரியான பாதையாகும் என்பதை இ.தொ.கா. மட்டுமே தொடர்ச்சியாக அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருகின்றது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
நாட்டை வீணடித்துக் கொண்டிருக்கும் யுத்தம் தொடர்பில் எந்த மலையக தலைவரும் வாய் திறப்பதே இல்லை'' பதவி பறிப்போய்விடும் என்பதனாலேயே எவரும் வாய்திறப்பதற்கு தயங்குகின்றனர். ஆனால் இ.தொ.கா. மட்டுமே துணிந்து குரல் கொடுக்கின்றது என்றும் அவர் கூறினார்.இ.தொ.கா. வின் மேதினக் கூட்டம் இன்று அட்டன் பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் இடம்பெற்றபோது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதி அமைச்சர் எஸ். கேதீஸ்வரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இம்மேதினக் கூட்டத்தில் முன்னதாக அட்டன் மல்லிகைப்பூச் சந்தியில் கூடி ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் ஊர்வலமாக அட்டன் பஸ் நிலையத்தை வந்தடைந்தனர். ஊர்வலத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதி அமைச்சர்களான முத்து சிவலிங்கம், எல். கேதீஸ்வரன் எம். சச்சிதானந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற இம்மேதினக் கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆறுமுகன் மேலும் கூறியதாவது, இன்று இங்கு நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருப்பது மேதினக் கூட்டமல்ல, இலங்கை தொ.கா. மீது வைத்துள்ள தோட்டத் தொழிலாளர்களின் நம்பிக்கைக் கூட்டமாகும். இ.தொ.கா. மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அதேபோல் இ.தொ.கா. மக்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றது