கொழும்பு நகரசபை மைதானத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஜே.வி.பி.யின் மே தினக் கூட்டத்தில் ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க உரையாற்றும் போது சிறிலங்காவிற்கு எதிரான இந்தியாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக தெருவில் இறங்கி போராட்டங்களை ஆரம்பிப்போம் எனவும்
சிறிலங்கா தொடர்பிலான கொள்கையை மாற்றிக்கொண்டு இந்தியா வாலைச் சுருட்டிக் கொள்ள வேண்டும். 2009 ஆண்டு மே தினத்தை ஜே.வி.பி. மட்டுமே நடத்த வேண்டும். அதற்கான தீர்மானத்தை இன்றே மேற்கொண்டு நீலம், பச்சை நிறங்களை ஓரம் கட்டுவோம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க மேலும் தெரிவித்தார்.
அங்கு உரையாற்றும்போது மேலும் கூறியதாவது:
இந்தியா தமது தாய்நாடு, தமது மீட்பர் என நினைத்துக் கொண்டிருந்த தமிழ் மக்கள் இன்று துரோகத்தனத்தைப் புரிந்து கொண்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் விரட்டப்பட்டு அவர்களது வாழ்விடங்களை ஆக்கிரமித்துள்ளது. எமது படையினர் புலிகளிடமிருந்து கிழக்கை மீட்டது தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை தமது சொந்த இடங்களில் வாழவைப்பதற்கே ஆகும். ஆனால், இன்று சம்பூர் உட்பட கிழக்கின் முக்கிய இடங்களை இந்தியா ஆக்கிரமித்துள்ளது. அதேபோல் வட பகுதியையும் மலையகத்தையும் ஆக்கிரமிக்கவும் திட்டமிட்டுள்ளது.
ஐ.நா. சபையில் இந்தியாவுக்கும் ஒரு வாக்குதான் உள்ளது. இலங்கைக்கும் ஒரு வாக்குதான் உள்ளது என்பதைப் புரிந்து செயற்பட வேண்டும். தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் ஆக்கிரமிப்பாளனை விரட்டியடிக்க ஒன்றுபடுவோம். எமது வளங்களைப் பாதுகாக்க போராடுவோம்.
நாளுக்கு நாள் விலைவாசி அதிகரித்து வருகிறது. அரசாங்கத்திற்கு மக்களின் குரல் காதில் விழவில்லை. அதற்காகவும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான தேசிய முன்னணி, ஜே.வி.பி. தலைமையில் அமைக்கப்பட்டு விட்டது. அதற்கான யாப்பை தயாரிக்க மக்களின் கருத்துக்களைக் கேட்டுள்ளோம்.
என அவர் மேலும் தெரிவித்தார்.