கிளிநொச்சிப் பிரதேசத்தை விரைவில் மீட்போம் என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச "சூளுரை"த்துள்ளார்.
பொலநறுவை மாவட்டத்தின் தெகியத்த கண்டியில் நடைபெற்ற மே நாள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
கிழக்கை புலிகளிடம் இருந்து மீட்ட பின்னர் நடைபெறும் இந்த மே நாள் கூட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
மாவிலாற்று அணைக்கட்டு விவகாரத்தைத் தொடர்ந்து கிழக்கை மீட்டு எடுத்தோம்.
சிறிலங்காப் படையினர் பாடுபட்டு மீட்டு எடுத்த கிழக்கை மீண்டும் பிரபாகரனிடம் கையளிப்பதற்கு நாம் தயாராக இல்லை.
எனவே கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ரணிலுக்கு அளிக்கப்படும் வாக்குகள் பிரபாகரனுக்கு அளிக்கப்படும் வாக்குகள் என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது.
அத்தகைய வரலாற்றுத் தவறை கிழக்கு மக்கள் ஒருபோதும் செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது.
இந்த மண்ணை துண்டாடுவதற்கு நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன். மக்கள் என்னை நம்பலாம்.
பிரபாகரனிடம் கிழக்கு மீண்டும் செல்வதற்கு இடமளிக்காதீர்கள்.
கிழக்கை எப்படி படையினர் மீட்டார்களோ அதேபோன்று வடக்கையும் மீட்போம். வடக்கில் படையினர் தற்போது முன்னேறிக் கொண்டிருக்கின்றனர்.
கிளிநொச்சியை விரைவில் மீட்போம். எனவே கிழக்குத் தேர்தலில் எம்மை மக்கள் தோற்கடித்தால் ஒட்டுமொத்தமாக தோற்கப்போவது மக்களாகிய நீங்கள்தான்.
கிழக்குத் தேர்தலில் மக்கள் எமக்கு அளிக்கும் வாக்குகள் ஒவ்வொன்றும் படையினர் வடக்கு நோக்கு முன்னேறுவதற்கு வழங்கும் அங்கீகாரமாகவே இருக்கும் என்றார்.