மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பிரதேசத்தில் வியாழக்கிழமை இரவு ஈ.பி.டி.பி.யினர் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத்தாக்குதலையடுத்து அப்பகுதியில் கடும் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
வியாழக்கிழமை இரவு 9.45 மணியளவில் செங்கலடியின் சந்திப்பகுதியில் ஈ.பி.டி.பி.யினர் தேர்தல் பிரசுரங்களை ஒட்டிக்கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயததாரிகள் இருவர் இவர்கள் மீது கைக்குண்டை வீசிவிட்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த ஈ.பி.டி.பி.யை சேர்ந்தவர்களும் படையினரும் அப்பகுதியில் சரமாரியான துப்பாக்கிசூட்டை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு மணித்தியாலமாக இந்த துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவித்தன.
எனினும் இந்த துப்பாக்கிசூடு காரணமாக ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பான தகவல் இதுவரை கிடைக்கவில்லை.