தமிழ்நாட்டில் கருணா குழுவினர் ஊடுருவி தமிழகத் தலைவர்களைக் கடத்தி புலிகள் மீது பழிபோட சதித் திட்டம் தீட்டியுள்ளனர் என்று புலிகள் மீது கரிசனம் காட்டும் செய்தியை கசிய விட்டிருக்கும் இந்திய அரசின் நிலைப்பாடு என்ன என்று தமிழ்நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிங்களப் படையுடன் சேர்ந்து இயங்கும் கருணா குழுவினர் தமிழ்நாட்டில் ஊடுருவி தமிழகத் தலைவர்களைக் கடத்தி- விடுதலைப் புலிகள் மீது பழிபோட சதி நடக்கிறது என்று இந்திய அரசின் உளவுப்பிரிவு தமிழ்நாடு காவல்துறைக்கு எச்சரிக்கை செய்ததாக அண்மையில் செய்தி வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு முறையும் சிங்களப் படையினர் விடுதலைப் புலிகளால் பெரும் பாதிப்பிற்கும் இழப்பிற்கும் ஆளாகும் போதெல்லாம்- இந்தியாவில் குறிப்பிடத்தக்க அரசியல் நகர்வுகள் நிகழ்வதுண்டு.
எடுத்துக்காட்டாக, கடந்த வாரம் முகமாலைப் பகுதியில் நடந்த மோதலில் நூற்றுக்கணக்கான சிங்களப் படையினர் உயிரிழந்துள்ளனர்.
இத்தகைய சூழலில்தான் இந்திய உளவுப் பிரிவு இவ்வாறான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இத்தனை ஆண்டு காலம் தமிழ்நாட்டில் புலிகள் ஊடுருவல் என்ற செய்தியை பல நூறுமுறை தமிழ்நாட்டின் ஊடகங்களில் உலவவிட்ட இந்திய உளவுப் பிரிவு, முதன் முறையாக கருணா பிரிவு ஊடுருவல்- தலைவர்களைக் கடத்திப் புலிகள் மீது பழிபோட முயற்சி என்று கரிசனம் காட்டியுள்ளது.
தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் ஊடுருவல் என்று ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்- தமிழ்த் தேசியத் தலைவர்களை தடாவிலும் பொடாவிலும் ஆண்டுக்கணக்கில் சிறையிலடைத்தவர்கள் இப்போது புலிகள் மீது பழி போடப் போகிறார்களே என்று கலங்குகின்றனர்.
சிங்களப் படையுடன் இணைந்து செயல்படும் கருணா குழுவினர் என்று குறிப்பிட்டுள்ள இந்திய அரசும் உளவுப்பிரிவும்தான், கருணா குழு ஜனநாயக நீரோட்டத்தில் கலந்துவிட்டது என்று கூறி, சிங்களப் படைகளுக்கு ராடார்களையும் ஆயுதங்களையும் வாரி, வாரி வழங்கி வழங்கி வருகிறது.
இந்நிலையில், திடீரென்று கருணா குழு பயங்கரவாதிகளாக இந்திய உளவுப் பிரிவின் கண்களுக்குத் தெரிகிறது.
ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்களப் படைக்கு இராணுவ உதவி செய்யாதே! என்று தமிழக மக்களை விடுதலைச் சிறுத்தைகள் அணி திரட்டியது.
அதே காலகட்டத்தில் வன்னிப்பகுதியில் எல்லைப் பகுதியில் புலிகளின் முன் சிங்களப் படை முழுவதுமாக செயலிழந்து நின்றது.
இந்நிலையில், சிங்களப் படைத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு இந்திய அரசு சிவப்புக் கம்பள வரவேற்பளித்தது.
இது தமிழ்நாட்டிலும் தமிழீழத்திலும் பெரும் கொதிப்பை உண்டாக்கியது.
இந்நிலையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த சிங்கள அரசு முன் முயற்சிகளைத் தொடங்கியது.
இது இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற குரல்கள் தமிழ்நாட்டிலிருந்து வெடித்துக் கிளம்பின.
இந்த நிலையில்தான், பன்னாட்டு அரங்கில் இந்தியத் தலையீடு வலியுறுத்தப்படுகிறது. குறிப்பாக, அண்மையில் நோர்வேயில் ஆன்மீகவாதி ரவிசங்கர் அவர்களின் முயற்சியில் நிகழ்ந்த தெற்காசிய அமைதி மாநாட்டில் ஈழச் சிக்கலில் இந்தியா தலையிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில்- இன்று சிங்களப் படையுடன் இணைந்து இயங்கும் கருனா குழு என்று குறிப்பிட்டுள்ளது இந்திய உளவுப் பிரிவு.
இந்நிலையில் இந்திய அரசு, சிங்கள அரசுக்குக் கொடுத்த ராடார்களையும் ஆயுதங்களையும் கப்பல்களையும் திரும்பப் பெறுமா?
தமிழ்நாட்டு மீனவர்களை நடுக்கடலில் சுட்டுக் கொல்லும் சிங்கள இராணுவத்தைக் கண்டிக்குமா?
கருணா குழு தமிழ்நாட்டில் ஊடுருவல் என்று கூறியுள்ள இந்திய அரசு, இந்தச் செய்தியை வழக்கம் போல் தனது சொந்த அரசியல் ஆதாயத்திற்காக மட்டும் கசிய விட்டிருக்கிறதா?
அல்லது ஒரு உண்மையை உணர்ந்து அதன் அடிப்படையில் பன்னாட்டு உறவுகள் குறித்தக் கோட்பாடுகளுக்கு இசைவாக- சரியான புரிந்துணர்வுடன் இந்தியத் தலையீடு என்கிற தனது கடமையைச் செய்யப் போகிறதா? போன்ற பல்வேறு கேள்விகளுடன், தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டுமின்றி- புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மீறி வடக்கு - கிழக்கு மாகாணத்தைப் பிரிக்கும் சிங்கள அரசின் சதியை முறியடிக்க இந்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும்.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஆவண செய்ய வேண்டும்.
அண்மையில் கடத்தப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை மீட்பதற்குரிய நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.