தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் தமிழர்களின் கலைபண்பாட்டுகள் உயரிய வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காக தீர்க்கதரிசனமான சிந்தையுடன் பல கட்டமைப்புக்களை உருவாக்கியுள்ளாரென தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற மகளிர் கலைபண்பாட்டுக்கழகத்தின் 15ஆவது ஆண்டு நிளைவு சங்கநாதம் ஒளிப்பேழை-02 தொகுப்புவெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மகளிர் கலை பண்பாட்டுக்கழகம் 15 ஆண்டுகளை நிறைவுசெய்தது என்பது மகிழ்வுக்குரியது. எமது விடுதலைப்போராட்டத்துடன் மக்களை கருத்தியல் ரீதியாக அணிதிரட்டுவதில் மகளிர் கலைபண்பாட்டுக்கழகம் செயற்பட்டு வந்திருக்கிறுது.
கிராமம் கிராமமாகச் சென்று விடுதலை உணர்வு தேசஉணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதில் மகளிர்கலை பண்பாட்டுக்கழகம் ஈடுபட்டு வந்திருக்கின்றது.
எந்தச்சவால்களையும் எதிர்கொள்ளக்கூடிய மக்கள் அணியை அணிதிரட்டுவதில் மகளிர் கலைபண்பாட்டுக்கழகத்தின் பங்கு அளிப்பரியது விடுதலைப்போராட்டத்தில் மக்களைப்போராட்டப் பங்காளியாக்குவது என்பது ஒரு நெருக்கடியான சூழலில் இலகுவான காரியமல்ல. பொருண்மிய நெருக்கடி வளர்ப்பற்றாக்குறைகள் போன்ற இடர்களுக்கு மத்தியில் கலைப்பயணம் மேற்கொள்வது என்பது இலகுவான விடயமல்ல.
எமது விடுதலைப்போராட்டத்தில் கலைஞர்களும் போராளிகளும் சமனான பணிகளையே மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்காரணமாகவே போர்க்களங்களில் கலைஞர்களால் ஆற்றுகைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. வான்தாக்குதல்கள் எறிகணைத்தாக்குதலுக்கு மத்தியில் மக்களை அணிதிரட்டுவதில் மகளிர் கலைபண்பாட்டுக்கழகம் ஈடுபட்டிருக்கின்றது. ஒருதேசம் மொழி கலை பண்பாடுகளால் பலமடையும்போது விடுதலைப்போராட்டம் பலம்பெறுகின்றது. தமிழர்களின் கலைகளையும் பண்பாடுகளையும் சிதைக்கவேண்டும் என்பதற்காக 50 ஆண்டுகளுக்கு மேலாக சிங்களப் பேரினவாதம் முயன்று வருகின்றது.
அதில் ஒருபோதும் சிங்களப் பேரினவாதம் வெற்றிபெறப்போவதில்லை. கலைஞானம் இல்லாத ஒரு இனத்திடம் விடுதலையுணர்வு பிறக்காது. எமது தேசியத்தலைவர் அவர்கள் இதன்காரணமாகவே தமிழர்களின் கலை பண்பாடுகள் வளர்க்கவேண்டும் என்பதற்காக பல கட்டமைப்புக்களை உருவாக்கியுள்ளார். இன்றைய மதிப்பளிப்பால் எமது தலைவர் அவர்கள் மகிழ்வடைவார் எமது புலம்பெயர்மக்களின் உறவிணைப்புப் பாலமாக கலைகள் விளங்குகின்றன எனவும் அவர்மேலும் தெரிவித்தார்.
நிகழ்வின் தொடக்கத்தில் பொதுச்சுடரினை தமிழீழ மாவீரர் பணிமனைப்பணி முதல்வர் பொன்தியாகம் ஏற்றினார். தமிழீழத் தேசியக்கொடியினை தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் ஏற்றினார்.
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களது திருவுருவப்படத்திற்கு துணைவியார் இசைச்செல்வி சுடரேற்றி மலர்மாலை அணிவித்தார். மகளிர் கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை, திட்டமிடலுக்கும் மேம்பாட்டுக்குமான மகளிர் பொறுப்பாளர் தமிழினி, புலிகளின் குரல் நிறுவனப்பொறுப்பாளர் நா.தமிழன்பன் ஆகியோர் நிகழ்த்தினர்.
சங்கதாம் ஒளிப்பேழையினை தமழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் வெளியிட பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் துணைவியார் பெற்றுக்கொண்டார். கலைஞர்களுக்கான மதிப்பளிப்பினை தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் மாவீரர் பணிமனை பணிமுதல்வர் ஆகியோர் வழங்கினார்.