தண்டனையிலிருந்து தப்பிக்கொள்வது பற்றிய சுட்டெண்ணில் 13 நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஊடகவியலாளர்களின் படுகொலைகளைத் தடுப்பதற்கு தவறியிருக்கும் நாடுகள் தொடர்பாகவே பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு இந்தப் பட்டியலைத் தயாரித்திருப்பதுடன், இலங்கை 0.408 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும், ஈராக் 2.821 புள்ளிகளுடன் முதலாமிடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.
“அரசாங்கத்துக்கும், பிரிவினைவாதக் குழுவுக்கும் இடையில் தொடர்ச்சியாக மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. மோதல்களுக்கிடையில் அகப்படுவதைவிட ஊடகவியலாளர்கள் வேறு வழிகளில் கொல்லப்படுகின்றனர்.
இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள். சிரேஷ்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் 2000ஆம் ஆண்டு தனது வீட்டில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இலங்கையில் எட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன” என்று ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தண்டனையிலிருந்து தப்பிக்கொள்ளும் கலாச்சாரம் காணப்படும் நாடுகளின் பட்டியலில் ஈராக் முதலாம் இடத்திலும், சிரியா இரண்டாம் இடத்திலும் சோமாலியா மூன்றாம் இடத்திலும் காணப்படுகின்றன.
“ஒவ்வொருமுறையும் ஊடகவியலாளர் கொல்லப்படும்போது அதனைச் செய்த குற்றவாளி சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுகிறான்.
ஆனால் ஏனைய ஊடகவியலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்” என ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜொயல் சைமன் தெரிவித்துள்ளார்.