இலங்கையின் மீன்பிடி கைத்தொழிலை விருத்தி செய்வதற்கும் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் வள்ளங்களை நிறுத்தி வைப்பதற்கு ஏற்ற வகையிலும் புதிய மீன்பிடி துறைமுகமொன்றை நிர்மாணிப்பதற்கு நெதர்லாந்து அரசாங்கம் உதவ முன்வந்துள்ளதாக மீன்பிடித்துறை மற்றும் நீரியல் வள அமைச்சு அறிவித்துள்ளது. ‘டிக்கோவிட்ட’ எனுமிடத்தில் அமைக்கப்படவுள்ள இந்த மீன்பிடி துறைமுகத்தை நிர்மாணிப்பதற்காக நெதர்லாந்து அரசாங்கத்துடன் 8 பில்லியன் ரூபா பெறுமதியான உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது.
இத் துறைமுகமானது 65 வள்ளங்கள் மற்றும் 150 சிறு மீன்பிடி படகுகள் போன்றவற்றை கொண்டிருக்கக்கூடிய திறனுடன் நாட்டின் மிப்பெரிய மீன்பிடி துறைமுகமாக அமையவுள்ளது. மேலும் 6.5 ஏக்கர் பரப்பை கொண்ட இந்த துறைமுகத்தில் குளிர் களஞ்சியப் பிரிவுகள், பனிக்கட்டி தயாரிப்பு இயந்திரங்கள் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி செயற்பாட்டுக்கான உபகரணங்கள் என்பன அமைந்திருக்கும்.
இதன் நிர்மாண பணிகளுக்காக நெதர்லாந்து அரசாங்கம் 17.1 மில்லியன் யூரோக்களை நன்கொடையாகவும் எஞ்சிய தொகையை இலகு கடனாகவும் வழங்கவுள்ளது. இரண்டு வருடங்களில் பூர்த்தி செய்யப்படவுள்ள இத்துறைமுகம் மூலம் 3000 மீனவர்கள் நன்மையடையவுள்ளனர் என்றும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது