சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லாத, இரு ஆடை தொழிற்சாலைகளை துல்ஹிரிய மற்றும் சீதுவை ஆகிய பிரதேசங்களில் நிறுவுவதற்கு இங்கிலாந்திலுள்ள பிரபல ஆடை உற்பத்தி நிறுவனமான மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஏற்றுமதி; அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அமைச்சர் மேலும் கூறியதாவது:
இந்த நிறுவனத்தின் பிரதான அதிகாரியொருவர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயமென்றின்போதே இந்த தொழிற்சாலைகள் அமைவதற்கு பொருத்தமான இடமாக இலங்கை தெரிவு செய்ய பட்டுள்ளது.
நாட்டில் யுத்தம் நடைபெறுகின்ற அதேவேளையில் பாரிய அபிவிருத்தி திட்டங்களும் முன்னெடுக்கபட்டு வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் கானா மாநாட்டில் இலங்கையின் இந்த நிலைமை தொடர்பாக சிலாகித்து கூறப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் 125 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அரசினால் முன்னெடுக்கபட்டு வருகின்ற பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் இந்த மாநாட்டில் விளக்கி கூறபட்டன. சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், உமா ஓயா அபிவிருத்தி திட்டம், நுரைச்சோலை, கெரவலபிட்டிய மின் சக்தி திட்டம் என்பன குறித்தும் இந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்