வடக்கு - கிழக்கைப் பிரித்து கிழக்கில் மகிந்த அரசு நடத்த உள்ள தேர்தலையொட்டி சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப்படைகள் இடையே உள்மோதல் தீவிரமடைந்து வருகின்றது.
சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எஃப் (வரதர் அணி) ஈ.பி.டி.பி. உள்ளிட்டவைகள் இணைந்து ஈழவர் ஜனநாயக முன்னணி என்ற கூட்டமைப்பை உருவாக்கி மகிந்த அரசு நடத்தும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றன.
துணைப்படைகளின் இந்தக் கூட்டமைப்புக்கும் மற்றொரு துணைப்படையான பிள்ளையான் குழுவுக்கும் இடையே கடும் உள்மோதல்கள் நீடித்து வருகின்றன.
துணைப்படைகளின் கூட்டமைப்பு வேட்பாளரான ஆரோக்கியநாதன் மரியதாசனை மட்டக்களப்பில் பிள்ளையான் குழு அச்சுறுத்தியுள்ளதாக அக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் ஆரோக்கியநாதன் மரியதாசனின் வீடு மீது கைக்குண்டு வீசப்பட்டதாகவும் அதில் மரியதாசின் உறவினர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மைலம்பாவெளியில் துணைப்படைகளின் கூட்டமைப்பு வேட்பாளரான சதாசிவன் சுதேந்திரனை பிள்ளையானின் ஓட்டுநரான கவம் என்பவர் அச்சுறுத்தியதாகவும் துணைப்படைகளின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
தனது கைத்துப்பாக்கியை எடுத்து தொடர்ந்தும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டால் சுட்டுக்கொன்று விடுவதாக அந்நபர் மிரட்டியதாகவும் துணைப்படைகளின் கூட்டமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மற்றொரு வேட்பாளரான கேசவப்பொடி லோகேந்திரராஜாவை பிள்ளையான் குழுவைச் சேர்ந்த ஆரையம்பதி சாந்தன் என்ற நபர் அச்சுறுத்தியதால் அவர் தேர்தலில் போட்டியிடாமல் விலகிக் கொண்டதாகவும் துணைப்படைகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.