யாழ். குடாநாட்டின் உட்புறப் பகுதியில் படையினரின் தேடுதல்கள் அதிகரிக்கப்பட்டுள்ள அதேநேரம் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு வருகிறது.
குடாநாட்டில் படையினர் மற்றும் அவர்கள் சார்ந்தோருக்கெதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவதையடுத்தே குடாநாட்டின் உட்புறப் பகுதிகளில் ஆங்காங்கே சிறுசிறு அளவிலான தேடுதல்களை படையினரும் பொலிஸாரும் இணைந்து நடத்தி வருகின்றனர்.
குடாநாட்டில் மோதல்கள் நடைபெறும் முன்னரங்க பாதுகாப்பு நிலைப் பகுதிகளுக்கு பெருமளவு படையினர் அனுப்பப்பட்ட நிலையில் குடாநாட்டுக்குள் சிறுசிறு அளவிலான படையினர் பொலிஸாரின் உதவியுடன் இந்தத் தேடுதல்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பவள் கவச வாகனங்களும் தேடுதல்கள் நடைபெறும் இடங்களுக்குச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னர் பெருமளவு படையினர் அதிகாலை முதல் மாலை வரை பாரிய சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல்களில் ஈடுபட்டு வந்தனர்.
எனினும் தற்போது சிறுசிறு அளவிலான படையினர் பொலிஸாரின் உதவியுடன் இரவு நேரத்தில் கூட தேடுதல்களை மேற்கொள்கின்றனர்.
இதேநேரம், பல பகுதிகளிலும் புதிது புதிதாக சோதனை நிலையங்களும் வீதித் தடைகளும் அமைக்கப்பட்டும் வருகின்றன.
கல்வியங்காட்டுப் பகுதியில் சட்டநாதர் வீதி , ராச வீதி, ஆடியபாதம் வீதிகளில் புதிய சோதனை நிலையங்களும் வீதித் தடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
வலிகாமம், வடமராட்சி மற்றும் தென்மராட்சிப் பகுதியில் இவ்வாறு படையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.