எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்பில் தேர்தல் பிரசார கூட்டத்தை நடத்துவதற்கு அரசாங்கம் மைதானம் எதனையும் வழங்கவில்லையென ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கிழக்கு மாகாண தேர்தல் பிரசார கூட்டங்களை நடத்துவதற்கு நாளை மறுநாள் திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்ய இருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
மட்டக்களப்பில் தேர்தல் பிரசார கூட்டத்தை நடத்துவதற்கு மாநகர சபை மைதானத்தை கேட்டதற்கு அரசாங்கம் அதற்கான அனுமதியை வழங்கவில்லை என திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அரசாங்கத்தின் உத்தரவுக்கு அடிபணிந்து மட்டக்களப்பு மாநகர சபை மைதானத்தை தேர்தல் பிரசார நடவடிக்கைக்கு வழங்குவதற்கு மாநகர சபை நிர்வாகம் மறுத்து விட்டது.
இப்போது பாதுகாப்பற்ற நிலையில்தான் வீட்டு முற்றங்களில் கூட்டங்களை நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரப் பணிகளுக்கென முன்னர் ஹெலிகொப்டரை வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது. பின்னர் ஹெலிகொப்டர்களை வழங்க மறுத்து விட்டது. கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரச சொத்துக்கள், பயன்படுத்தப்படுகின்றன. அரசாங்க வாகனங்களை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துகிறார்கள்.