மடு மாதா தேவாலயப் பகுதியை சமாதான வலயமாக பிரகடனப் படுத்துமாறு ஏற்கனவே இரண்டு முறை ஜனாதிபதியைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளோம். இவ்வருடம் பெப்ரவரி மாதம் இருபதாம் திகதியும் இது குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்திருந்தேன் என மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய ராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்தார்.
மடு மாதா தேவாலயப் பகுதியை யுத்த சூன்ய வலயமாகப் பிரகடனப் படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சிடம் எவரும் கோரிக்கை விடவில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். இது குறித்து ஆயரிடம் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
ஆயர் இது குறித்து மேலும் கூறியதாவது: மடுமாதா தேவாலயப் பகுதியை சமாதான வலயமாக்கும்படி கத்தோலிக்க ஆயர்களுடன் ஜனாதிபதியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். ஜனாதிபதியும் எமது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.
மடுமாதா தேவாலயத்தைச் சூழவுள்ள இரண்டரை கிலோ மீற்றர் தூரத்தை யுத்த சூன்ய வலயமாகப் பிரகடனப்படுத்துமாறு நாம் பகிரங்கமாகவே மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளோம்