வன்னிக்களமுனையான மணலாறிலும், மன்னாரிலும் மற்றும் திருகோணமலை, கெப்பிற்றிக்கொல்லாவவிலும் இடம்பெற்ற முறியடிப்புத் தாக்குதல்களிலும், கிளைமோர் மற்றும் மிதிவெடிச் சம்பவங்களிலும் 4 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 17 படையினர் காயமடைந்துள்ளனர்.
மணலாறில்...
ஜனகபுரவில் நேற்று வெள்ளிக்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் மிதிவெடியில் சிக்கி சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.
கிரிபன்வேவவில் நேற்று இடம்பெற்ற மோதலில் 2 சிறிலங்காப் படையினர் காயமடைந்துள்ளனர்.
ஹலம்ப்வேவப் பகுதியில் சிறிலங்கா படைக்காவி ஊர்தி ஒன்று நேற்று இரவு கிளைமோர்த் தாக்குதலில் சிக்கியதில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
மன்னாரில்...
கள்ளிக்குளம் பகுதியில் நேற்று விடுதலைப் புலிகளின் மிதிவெடியில் சிக்கி படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.
பாலமுனை மேற்கில் நேற்று விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி 2 படையினர் காயமடைந்துள்ளனர்.
வேட்டையாமுறிப்பில் நேற்று முற்பகல் 9:35 மணிக்கு இடம்பெற்ற மோதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
புளியங்குளம் பகுதியில் நேற்று விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.
மன்னார் உயிலங்குளம்-திருக்கேதீச்சரம்-பரப்பாங்கண்டல் பகுதிகளில் நேற்று இடம்பெற்ற தாக்குதல்களில் 2 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமடைந்தனர்.
இதேவேளை அநுராதபுரம் கெப்பிற்றிக்கொல்லாவப் பகுதியில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவரும் ஊர்காவல் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரும் காயமடைந்துள்ளனர்.
கெப்பிற்றிக்கொல்லாவ புளியங்குளம் பகுதியில் வவுனியா கெப்பிற்றிக்கொல்லாவ சாலையில் உந்துருளியில் படையினர் சென்று கொண்டிருந்தபோது இன்று காலை 8:00 மணியளவில் இக்கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டது.
அதேநேரம் திருகோணமலை புல்மோட்டைப் பகுதியில் இன்று காலை 8:00 மணிக்கு இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் உயர்வலு மின்கம்பி சேதமாகியுள்ளது.