கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களின் செயற்பாடுகளுக்கு ஆயுதக்குழுக்களால் அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக அந்தந்த வாக்களிப்பு நிலையங்களின் வாக்குகள் இரத்துச் செய்யப்படும் என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
வாக்களிப்பு நாளன்று ஆயுதங்களுடனோ, ஆயுதம் இன்றியோ ஏதெனுமொரு குழு வாக்காளர்களைப் பயமுறுத்தி வாக்களிப்பு நிலையத்திற்குள் குழப்பங்களை ஏற்படுத்துதல், வாக்களிப்பு நிலைய அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்துதல், வாக்களிப்பு நிலைய அதிகாரிகளை மிரட்டி வாக்காளர்களுக்கு வாக்களிக்க இடமளிக்காமை, வாக்குப் பெட்டிகளை கடத்தல், ஆயுதங்களுடன் வாக்களிப்பு நிலையங்களுக்குள் புகுந்து அங்கு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தல் போன்றவை இடம்பெற்றால் அந்த வாக்களிப்பு நிலையங்களின் வாக்களிப்புகள் இரத்துச் செய்யப்பட்டு ஒருவார காலத்திற்குள் மீண்டும் வாக்களிப்பு ஒன்றினை நடத்தப்படும்.
அனைத்து வாக்களிப்பு நிலையங்களினதும் வாக்குச்சீட்டுக்களை தனித்தனியே அடையாளம் காணக்கூடிய முறையொன்றை தேர்தல் திணைக்களம் பயன்படுத்தி உள்ளதால் கள்ள வாக்களிக்க இடம் கிடைக்காது. அந்தந்த வாக்களிப்பு நிலையங்களுக்கு என ஒவ்வொரு நிறங்களில் வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்பட்டிருக்கின்றன.
அந்த முறைக்கேற்ப குறித்த வாக்களிப்பு நிலையத்திற்கான வர்ணம் தவிர்ந்த ஏனைய நிற வாக்குச்சீட்டுக்கள் பெட்டிக்குள் இருந்தால் அவற்றை நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.