மணலாறு களமுனையில் கடந்த மாதம் 27 ஆம் நாள் வான் புலிகளின் வீசிய 5 குண்டுகளால் சில கட்டடங்களும், 6 வாகனங்களும் சேதமடைந்ததாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே ரைம்ஸ்" தெரிவித்துள்ளது.
வான் புலிகளின் தாக்குதலில் கட்டடங்கள்- வானகங்கள் சேதம்: :சண்டே ரைம்ஸ்"
மணலாறு களமுனையில் கடந்த மாதம் 27 ஆம் நாள், தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகள் வீசிய 5 குண்டுகளில் சில கட்டடங்களும், 6 வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே ரைம்ஸ்" தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:
வலிந்த தாக்குதலை நடத்திய படையினர்
ஊடகச் சுதந்திர நாளினை நேற்று சனிக்கிழமை ஐக்கிய நாடுகள் சபை உலகம் முழுவதும் கொண்டாடியது. ஆனால் ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடாக சிறிலங்காவை பல நாடுகள் தரப்படுத்தியுள்ளன. இங்கு ஊடகங்கள் மக்களுக்கு தகவல்களை தெரிவிப்பதும் மிகவும் கடினமாகவே உள்ளது.
கடந்த மாதம் 23 ஆம் நாள் முகமாலையில் நடைபெற்ற சமர் தொடர்பாக படைத்தரப்பு தெரிவித்த தகவல்களில் விடுதலைப் புலிகள் வலிந்த தாக்குதலை நடத்தியதாகவே தெரிவித்திருந்தது. ஆனால் படை அதிகாரிகளும், படையினரும் இராணுவம் வலிந்த தாக்குதலை நடத்தியதாகவே தெரிவித்திருந்தனர்.
விடுதலைப் புலிகளின் தொலைத் தொடர்புகளை ஒட்டுக்கேட்ட போது அவர்களின் தளபதிகள் முன்னணி அரணில் உள்ள தமது உறுப்பினர்களை பின்வாங்கும் படி கேட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து படையினர் அவர்களின் அரண்களை கைப்பற்றிய சிறிது நேரத்தில் அவர்களின் மீது எறிகணைகள் அதிகளவில் ஏவப்பட்டன.
இந்தத் தாக்குதலிலேயே அதிகளாவான படையினர் பலியாகியிருந்தனர். 100-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதும், 355-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே இரத்மலானை வானூர்தி நிலையத்தில் இருந்து கொழும்பு மருத்துவமனைக்கு காயமடைந்த படையினரை ஏற்றிச்செல்லும் நோயாளர் காவு வாகனங்கள் தமது சைரன் ஒலிகளை நிறுத்த வேண்டும் என்ற உத்தரவுகளும் விடுக்கப்பட்டுள்ளன.
கள நிலைலமைகளின் உக்கிரத்தை இந்த சைரன் ஒலிகளை கொண்டே வீதியோரங்களில் வசிக்கும் மக்கள் கண்டறிவதுண்டு. மக்கள் இது தொடர்பில் தமக்கிடையில் தொலைபேசியிலும் தகவல்களை பரிமாறுவதுண்டு.
61 ஆவது படையணி உருவாக்குவதில் தீவிரம்
முகமாலைப் பின்னடைவைத் தொடர்ந்து இராணுவம் புதிய படையணியான 61 ஆவது படையணியை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றது. இந்தப் படையணிக்கான ஆயுதங்களை கொள்வனவு செய்யும் முயற்சிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. தற்போது இராணுவம் 8 தாக்குதல் டிவிசன்களை கொண்டுள்ளது. 51, 52, 53, 55, 56, 57, 58 (அதிரடிப்படை-1), 59 என்பனவே அவை.
இராணுவம் புதிய டிவிசனை உருவாக்கி வருகையில் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா 6 நாள் பயணமாக பாகிஸ்தானுக்கு நாளை செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு அவர் அரச தலைவர் முசராப் உட்பட பல இராணுவ அதிகாரிகளை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
படை அதிகாரிகள் கெளரவிப்பு
நாட்டுக்குச் சிறந்த சேவை ஆற்றியதற்காக பல படை அதிகாரிகளை கடந்த வெள்ளிக்கிழமை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கௌரவித்திருந்தார். அவர்களில் சரத் பொன்சேகாவும் அடங்குவார். அவர்களுக்கு "விசிஸ்ர சேவா விபூசணயா" விருதுகள் வழங்கப்பட்டன.
கடந்த வருடம் 2,000 படையினர் பலி
கடந்த வாரம் இராணுவத்தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய சரத் பொன்சேகா, தனது பதவிக்காலத்தில் விடுதலைப் புலிகளை முறியடிக்கப் போவதாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, அனுராதபுரம் பகுதிகளில் இருந்து ஊடகங்களுக்கு யார் தகவல்களை வழங்குவது என்பதும் தனக்குத் தெரியும் எனவும் தெரிவித்திருந்தார்.
44 மில்லியன் ரூபாய்கள் பொறுமதியில் தனது பாவனைக்கு வாங்கப்படவுள்ள பென்ஸ் ரக கார் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது, நான் ஒரு இராணுவத்தளபதி எனவே நான் ஓட்டோவில் அல்லது வானில் அல்லது ரொயட்டா கொறொல்லா காரில் பயணம் செய்ய முடியாது. ஏனைய தளபதிகள் வாகனங்களை கொள்வனவு செய்யும் போது ஊடகங்கள் அவற்றைக் கண்டு கொள்வதில்லை. என்னையே அவர்கள் உன்னிப்பாக கவனிப்பதுண்டு எனவும் தெரிவித்திருந்தார்.
கடந்த வருடம் நடைபெற்ற சமர்களில் 2,000 படையினர் கொல்லப்பட்டதாகவும், 4,000 பேர் காயமடைந்துள்ளதாகவும், 5,000 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
விடுதலைப் புலிகளின் வான்குண்டு வீச்சில் கட்டங்கள் சேதம்
முகமாலைச் சமர் நடைபெற்ற நான்கு நாட்களில் விடுதலைப் புலிகளின் 2 வானூர்திகள் மணலாறு படை நிலைகள் மீது 5 குண்டுகளை வீசியுள்ளன. அவற்றில் 2 குண்டுகள் படையினாரின் நிலைகளுக்குள் வீழ்ந்து வெடித்துள்ளன. இந்த தாக்குதலில் சில கட்டடங்களின் கூரைகளும், 6 வாகனங்களும் சேதமடைந்துள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.