தமது பதவிக்காலம் முடியும் முன்னர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இருபத்து ஐந்து வருட காலமாக உள்ள புண்ணை ஒரேயடியாக குணமாக்க முடியாது என்றும் அவர் கூறி யுள்ளார்.
இராணுவத் தளபதி சரத்பொன்சேகா வாராந்த பத்திரிகை ஒன்றிற்கு அளித்த செவ்வியிலேயே இதனை கூறி உள்ளார். அவர் அச் செவ்வியில் மேலும் கூறியதாவது, முகமாலையில் நடந்த மோதலில் எமக்கு பின்னடைவு எதுவும் ஏற்படவில்லை. புலிகள் எம் மீது தாக்குதல் நடத்த போகிறார்கள் என்பது எமது புலனாய்வு தகவல்கள் மூலம் தெரியவந்தது. சம்பவ தினம் அதிகாலை 2.30 மணியளவில் புலிகள் எம் மீது கடுமையான மோட்டார் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தினார்கள். சுமார் மூன்று மணித்தியாலம் பதில் தாக்குதல்நடத்தி புலிகளை பின் வாங்கச் செய்தோம். இதனை அடுத்து எமது ஐந்து படை அணிகள் புலிகளின் பதுங்கு குழிகளை அழித்துக் கொண்டு 700 மீற்றர் தூரம் முன்னேறின. காலை 11.30 மணி அளவில் நாம் அந்த இடத்தை கைப்பற்றி எமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தோம்.
இவ்வேளையில் புலிகள் கடுமையான மோட்டார் பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டனர். எமது படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 160 புலிகள் உயிரிழந்தனர் என எமது புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. நாங்கள் கைப்பற்றிய பகுதிகளில் இருந்து நூறு மீற்றர் தூரம் பின்வாங்கி காயமடைந்த எமது வீரர்களை தேடினோம். அங்கு 47 பேர் உயிரிழந்திருந்தனர். 33 பேரைக் காணவில்லை. 300 பேர் காயமடைந்தனர். அவர்களில் 200 பேர் மீண்டும் கள முனைக்கு திரும்பி விட்டனர். எமது சொற்ப தொகையான ஆயுதங்களை புலிகள் கைப்பற்றியுள்ளனர்.
நாம் கைப்பற்றிய பகுதிகளில் யுத்த டாங்கி கண்ணிகளையும் மிதி வெடிகளையும் புலிகள் புதைத்து வைத்திருந்தனர். இதனை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த முப்பது இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். மோதல்களின் போது இவை எல்லாம் சாதாரண விடயங்கள். முகமாலை மோதலின் பின்னர் எமது படையினரின் மனோநிலை பாதிக்கப்படவில்லை. எம்மிடம் ஒரு இலட்சத்து அறுபத்தி ஏழாயிரம் படையினர் உள்ளனர். ஐந்து படை அணியினரே இந்த மோதலில் ஈடுபடுத்தப்பட்டனர். நாங்கள் இந்த இராணுவ நடவடிக்கையை ஆரம்பிக்காமல் இருந்தால் 160 புலிகளை கொல்ல முடிந்திருக்காது. உலக நாடுகளில் நடைபெற்ற யுத்தங்களில் உயிரிழப்புகளோ காயங்களோ இல்லாமல் வெற்றி அடைந்துள்ளனரா. நாங்கள் வீழ்ச்சி அடையும் போது கைதட்டி சிரிப்பவர்கள் எமது மத்தியில் இருக்கின்றனர். சவச்சாலைகளும் மலர்சாலைகளுக்கு சென்று மரணங்கள் கூடுதலாக இருந்தால் சந்தோஷப்படக் கூடியவர்களும் இருக்கின்றனர்.
படையினர் பின்வாங்கினால் நாம் அவர்களுக்கு தைரியமூட்ட வேண்டும். புலிகள் உலகில் உள்ள சக்தி வாய்ந்த தீவிரவாத அமைப்புகளில் ஒன்றாகும். முகமாலையிலேயே விசேட பலம் பெற்ற புலிகளின் அணிகள் இருந்தன. அவர்களின் பலத்தை பற்றி நாம் குறைத்து மதிப்பிட முடியாது. புலிகள் என்ன ஆயுதங்களை பாவிப்பார்கள் என்ற விபரங்கள் என்னிடம் உள்ளன. இவற்றை எல்லாம் பயன்படுத்தினார்கள். இதனை எமது படை வீரர்கள் சாதுரியமாக முறியடித்தார்கள்.
இப்போது புலிகள் தரப்பில் ஆளனி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போராட்ட களத்தில் அவர்களின் பலம் குறைந்து வருகிறது. இதனை நிவர்த்தி செய்யவே யாழ்ப்பாணத்தை கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். மழை காலத்திலும் ஈடுபட்டனர். அந்த முயற்சியும் கைக் கூடவில்லை. புலிகள் கிழக்கில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். அப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த புலிகளின் ஈழக் கனவு நிர்மூலமானது. மன்னாரில் நாம் இதுவரை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த எட்டு கிலோ மீற்றர் தூரத்தை கைப்பற்றி உள்ளோம். கடந்த 27 ஆம் திகதி நாம் மடு பிரதேசத்திற்குள் பிரவேசித்தோம். நாங்கள் எட்டு கிலோ மீற்றர் தூரத்தைக் கைப்பற்ற கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை இருந்தது. மடு தேவாலயத்தை சுற்றி புலிகள் பெருமளவிலான கண்ணி வெடிகளை பொருத்தி வைத்திருந்தனர். அவற்றை இப்போது எமது படையினர் அகற்றி உள்ளனர். இப்போது மடு பிரதேசம் எமது கட்டுப்பாட்டில் உள்ளது.
மடு தேவாலயத்திற்கு செல்வதற்கு யாத்திரிகர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுப்பேன் எனக் கூறி இருக்கிறேன். அதை கூடிய கெதியில் செய்து கொடுப்போம். இதற்கு முன்பாக மடு மாதாவின் திரு சொரூபத்தை மீண்டும் மடு திருப்பதிக்கு கொண்டு வந்து வைக்குமாறு மன்னார் ஆயரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். கூடிய விரைவில் இங்குள்ள கண்ணிவெடிகளை அகற்றி விடுவோம். அதன் பின்னர் யாத்திரீர்கள் மடுவிற்கு செல்லலாம். யாழ்ப்பாணத்தில் எமது படையினர் முப்பத்தி நான்காயிரம் பேர் உள்ளனர். யாழ்ப்பாணத்தை பிடிக்க முயற்சித்தால் அதுவே பிரபாகரனின் முடிவாகும். கிளிநொச்சியில் இருந்து பன்னிரெண்டு கிலோ மீற்றர் தொலைவில் எமது படைப்பிரிவினர் நிலை கொண்டுள்ளனர். கிழக்கில் இறுதியாக இருக்கும் புலிகளை கொல்லும் வரை நாங்கள் கிழக்கில் இருந்து படைகளை நகர்த்த மாட்டோம். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இதுவரை ஏழாயிரம் புலிகள் இயக்க உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் கிளிநொச்சியை கைப்பற்றுவது எமக்கு கடினமாக இருக்க மாட்டாது.
யுத்தத்தை முன்னெடுத்து செல்ல சகல வளங்களும் எமக்கு கிடைத்துள்ளன. அதற்கான ஆளனி பலமும் எம்மிடம் இருக்கின்றன. புலிகளின் இழப்புகளை வைத்துக் கொண்டு யுத்தம் செய்ய முடியாது. எங்களுக்கு விடுமுறை இல்லை, பண்டிகைகள் இல்லை. வருடத்தில் 365 நாட்களும் யுத்தம் செய்கிறோம். இந்த அனுபவத்தை வைத்து விரைவில் யுத்தத்தில் வெற்றி காண்போம். அப்போது யுத்தத்தை பற்றி குறை கூறியவர்கள் கவலைப்பட வேண்டிய நிலைமை ஏற்படும்.