சமையல் எரிவாயு மற்றும் பால்மா பக்கற்றுகளின் விலைகளில் எதிர்வரும் ஜூன் மாதம் வரை மாற்றங்கள் எதுவும் ஏற்படாது என வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
சமையல் எரிவாயு மற்றும் பால்மா என்பவற்றின் விலைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
இலங்கையில் சமையல் எரிவாயு சந்தைப்படுத்தும் நிறுவனமான ஷெல்காஸ் நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 20 ரூபாவினால் குறைத்திருப்பதாக அறிவித்திருந்தது. இந்த விலைக் குறைப்பானது ஷெல்கேஸ் நிறுவனத்தின் தன்னிச்சையான செயற்பாடல்ல. உலக சந்தையில் விலை மாற்றங்கள் ஏற்படும்போது உள்ளுர் சந்தையிலும் அந்த மாற்றங்கள் நிகழ வேண்டும் என்பதே அந்த நிறுவனத்துடனான நுகர்வோர் அதிகார சபையின் ஒப்பந்தமாகும். இதற்கமைய ஷெல்கேஸ் நிறுவனத்துடன் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையிலேயே சமையல் எரிவாயுவின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு தற்போது 1,729 ரூபாவுக்கு விற்கப்படுகிறது.
அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் அரசாங்கம் ‘கென்டி’ என்ற பெயரில் புதிய பால்மாவை உள்ளுர் சந்தையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள இந்த பால்மா ஏனைய பால்மா பக்கற்றுகளை விடவும் 30 ரூபா குறைக்கப்பட்டு 245 ரூபாவுக்கு விற்கப்படுகிறது.
விலை அதிகரிப்பு மற்றும் குறைப்பு என்பன உலக சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு அமையவே இடம்பெறுகின்றன. இதனை அரசாங்கத்தினாலோ அமைச்சினாலோ கட்டுப்படுத்த முடியாது. எப்படியிருப்பினும் மக்களைத் திசை திருப்பிய பிரசாரங்கள் தற்போது பொய்யாக்கப்பட்டுள்ளன.
சமையல் எரிவாயு மற்றும் பால்மா என்பவற்றின் விலைகளில் அதிகரிப்பை ஏற்படுத்;த முயற்சிக்கும் வர்த்தகர்களுக்கு எதராக வழக்குத் தொடரப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.