சிறிலங்காப் படையினர் மீண்டும் கவசப்படையைப் பயன்படுத்தி தாக்குதலை தொடர்வார்களானால் அந்தப் படையணி சின்னாபின்னமாக்கப்படும். அது சிலவேளை விடுதலைப் புலிகளின் கவசப்படைப் பலமாக உருவாகுவதற்கான நடவடிக்கையாக மாறும், அதனை நாம் மாற்றுவோம் என்று வட போர்முனைக் கட்டளைத் தளபதி கேணல் தீபன் தெரிவித்துள்ளார்.
முகமாலையில் களமுனைப் போராளிகளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி வாழ் மக்கள் சமைத்த உணவு, உலர் உணவு, குளிர்களி என்பவற்றை வழங்கும் நிகழ்வில் சிறப்புரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கடந்த மாதம் 23 ஆம் நாள், சிறிலங்காப் படையினரின் முகமாலை முன்நகர்வினை முறியடித்த வெற்றியின் மகிழ்வோடு, போராளிகளை உற்சாகப்படுத்த உலர் உணவுகளுடன் நீங்கள் களமுனைக்கு வந்திருக்கின்றீர்கள். இதனையிட்டு போராளிகள் மகிழ்வடைகின்றனர், நிறைவடைகின்றனர்.
சிறிலங்காப் படைத் தளபதி சரத் பொன்சேகா பாரிய வீர சபதமொன்றை இட்டு- அதாவது, ஈழப்போர் வரலாற்றில் இதுவரைக்கும் இல்லாத படை நடவடிக்கையினை சிறிலங்காப் படையினர் தொடங்கினர்.
கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரை படை நடவடிக்கை செய்து ஆனையிறவைப் பிடிப்போம் என்ற நம்பிக்கையில் சிறிலங்காப் படையினர் களத்தில் குதித்தனர்.
சரத் பொன்சேகாவின் வீரசபதமானது சிறிலங்காப் படையினர் இதுவரையும் சந்திக்காத தோல்வியை சந்திக்கப் போகின்றது என்பதனை நான் போராளிகளுக்கு எடுத்துக் கூறினேன்.
களத்தில் எதிரிக்கு எமது பதிலை நாம் காட்டினோம். அன்றைய வெற்றிக்கான காரணம், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் திட்டமிடலும், வழிகாட்டலும்தான். அத்துடன் களத்தில் நின்ற போராளிகளினதும் தளபதிகளினதும் அர்ப்பணிப்பும், எமது மக்களின் பின்தளப் பங்களிப்பும் ஊடாகத்தான் இந்த வெற்றியினை நாம் பெற்றெடுத்தோம்.
முகமாலையில் தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பு எல்லாப் பிரதேசங்களில் இருந்தும் வருகை தந்த மக்களின் பின்தள பங்களிப்பு ஊடாகவும், மக்கள் களமுனைப் போராளிகளுக்கு உலர் உணவு கொடுத்து உற்சாகபடுத்தியதன் ஊடாகவும்தான் வெற்றியைப் பெற்றோம்.
அதாவது, இந்த சண்டைக்களத்தைப் பொறுத்த மட்டில் கிளாலி தொடக்கம் கண்டல் வரையான பகுதியில் எமது போராளிகள் 10:30 மணிநேர தாக்குதல் திறனுடன் எதிரிக்கு எதிராக தீவிரமாகப் போரிட்டனர்.
சரத் பொன்சேகாவின் அறிக்கையின் பின் கிளிநொச்சிக்கு படையினர் வந்து விடுவார்களோ என்ற அச்சம் மக்கள் மனங்களில் இருந்தது. ஆனால் களமுனைப் போராளிகள் ஒவ்வொருவரின் மனதிலும் ஓரங்குலம் கூட எதிரி பிடித்துவிடக்கூடாது என்ற உறுதியில் தான் களத்தில் போராடினர்.
இந்த உறுதியுடனும் 25-க்கும் அதிகமான மாவீரர்களின் அர்ப்பணிப்பின் விளைவாகவும் தான் முகமாலை களத்தில் நாம் பாரிய வெற்றியைப் பெற்றெடுத்தோம்.
சிறிலங்காப் படையினர் 10:30 மணி நேரமாக எறிகணை, டாங்கி, வானூர்தித் தாக்குதல்களை தீவிரமாக நடத்தினர். இவற்றுக்கு மத்தியில்தான் எமது போராளிகள் போராடினர்.
இந்தக் களத்தில் சிறிலங்காவின் 53 ஆவது, 55 ஆவது டிவிசன் ஆகிய இரண்டு படைப்பிரிவுகளைச் சேர்ந்த 5,000-க்கும் அதிகமான அனுபவம் பெற்ற படையினர் களம் இறக்கப்பட்டனர்.
ஒரே நேரத்தில் படையினர் தாக்குதலை மேற்கொண்டனர். அதனை எமது போராளிகள் தீவிரமாக எதிர்த்து நின்று களமாடி வெற்றி பெற்றனர்.
சிறிலங்காப் படை நினைப்பது போன்று ஆனையிறவை இலகுவில் பிடித்துவிட முடியாது. சிறிலங்காப் படை ஆனையிறவுக்கான போரைத் தொடருமானால், அது யாழ்பாணத்தை படையினர் இழப்பதற்கான போராக மாறும். அதுதான் நடக்கப் போகின்றது. அவர்கள் கவசப் படைப்பிரிவை உருவாக்கியுள்ளனர். அந்தப் படைப் பிரிவுதான் ஆனையிறவை நகர்ந்து பிடிப்பதற்கான சிறிலங்காப் படையினரின் நம்பிக்கை நட்சத்திரமும் கூட.
படை நடவடிக்கைக்கு இறங்க முன்னதாக கடந்த மாதம் 22 ஆம் நாள் நாங்கள் கவசப் படைப்பிரிவின் இரு டாங்கிகளை அழித்து ஒரு செய்தியை அவர்களுக்கு கொடுத்தோம்.
இருந்தும் 23 ஆம் நாள் அந்த கவசப்படையணியும் தாக்குதலில் பங்கு கொண்டது. அதில் ஆறுக்கும் அதிகமான கவசப்படையின் கலங்கள் அழிக்கப்பட்டன.
சிறிலங்காப் படையினர் மீண்டும் கவசப்படையை பயன்படுத்தி தாக்குதலை தொடர்வார்களானால் அந்தப் படையணி சின்னாபின்னமாக்கப்படும். அது சிலவேளை விடுதலைப் புலிகளின் கவசப்படை பலமாக உருவாகுவதற்கான நடவடிக்கையாக மாறும், அதனை நாங்கள் மாற்றுவோம்.
தற்போது சிறிலங்காப் படையினர் படை நடவடிக்கை தொடர்ந்தால் கூட அதனை நாம் எதிர்கொள்ளத் தாயாராக உள்ளோம். எதிரி நினைப்பது போன்று முகமாலைக் களமுனையில் எதனையும் செய்துவிட முடியாது. அதற்கு மக்களின் முழுப்பங்களிப்பும் உதவியும் தொடர்ந்தும் இருக்க வேண்டும்.
ஆனையிறவுக்கான சிறிலங்காப் படையின் படை நடவடிக்கை முடிந்து விட்டது என நினைத்து விடக்கூடாது. இது ஆரம்பமாகத்தான் உள்ளது.
சிறிலங்காப் படையினர் பல முனைகளில் வன்னியை ஆக்கிரமிக்கும் படை நடவடிக்கையைத் தொடர்ந்த வண்ணம் உள்ளனர். ஆனால் சிறிலங்காப் படையினர் இன்று தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் போட்ட தந்திரோபாயத் திட்டத்துக்குள் சிக்குப்படத் தொடங்கியுள்ளனர்.
சண்டைக்கள நிலவரம் மாறும். அதனை விடுதலைப் புலிகள் மாற்றுவார்கள். மக்களின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்க வேண்டும். பின்தள உதவிகள் களத்தில் சீராக கிடைக்க வேண்டும். எல்லோரும் சேர்ந்து போராடினால்தான் வெற்றியைப் பெறலாம். இந்தக் காலகட்டத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் கரத்தை வலுப்படுத்துவதன் மூலம் வெற்றியை நாம் பெற்றுக்கொள்ள முடியும் என்றார் அவர்.