சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரால் படுகொலை செய்யப்பட்ட வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் இயக்குநர் கருணாரட்ணம் அடிகளாரின் படுகொலையினைக் கண்டித்து கனடாவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கண்டனப் பேரணி கடந்த வெள்ளிக்கிழமை (02.05.08) ரொறன்ரோ கீழ் நகரில் உள்ள சிறிலங்காவின் துணைத் தூதரகம் முன்பாக இடம்பெற்றது.
சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால் அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார், அருட்தந்தை பாக்கியறஞ்சித் அடிகளார், அருட்தந்தை சம்சன் என்.எதிரிசிங்க அடிகளார் ஆகியோரின் படுகொலைகளுக்கும் இந்நிகழ்வில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
கடும் குளிர், மழை, வேலை நாள் ஆகியவற்றினையும் பொருட்படுத்தாது பெண்கள், சிறார்கள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு கண்டனத்தையும், எதிர்ப்பையும் உரத்த குரலில் வெளிப்படுத்தினர்.
சிறிலங்காவிற்கான துணைத் தூதுவராக தற்போது இருப்பவர், நாடறிந்த இனவாதியும் முன்னாள் "டெய்லி நியூஸ்" நாளேட்டின் முதன்மை ஆசிரியருமான பந்துல ஜெயசேகர என்பது குறிப்பிடத்தக்கது.
சிறிலங்காவின் பரப்புரையை கனடாவில் முடுக்கிவிட அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் பந்துல ஜெயசேகர தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றார்.
"நாங்கள் பயங்கரவாதத்தை ஒழிக்கவே போர் செய்கின்றோம் தமிழ் மக்களுக்கு எதிராகப் போர் புரியவில்லை" என்ற குழந்தைத்தனமான பரப்புரையை பந்துல ஜெயசேகர கனாடாவில் முன்னெடுத்து வருகின்றார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் அதிகமான முழக்கங்கள் எழுதப்பட்ட அட்டைகளையும் கறுப்புக் கொடிகளையும் தூக்கிப் பிடித்தவாறு மக்கள் கால் கடுக்க நின்றதோடு அந்த முழக்கங்களை உரத்த குரலில் ஆவேசமாக ஒலிக்கவும் செய்தனர்.
கத்தோலிக்க மதகுருமாரைக் கொல்லாதே!
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொல்லாதே!
அப்பாவித் தமிழ் மக்களைக் கொல்லாதே!
மகிந்த ராஜபக்ச ஒரு பயங்கரவாதி!
சிறிலங்கா அரசு ஒரு பயங்கரவாத அரசு!
இனவாதிகளை கனடாவுக்குத் தூதுவராக அனுப்புவதனை சிறிலங்கா நிறுத்த வேண்டும்!
மகிந்த ராஜபக்சவின் கைகள் அப்பாவி தமிழ்மக்களின் குருதி படிந்த கைகள்!
தமிழ் மக்களுக்கு நீதி வழங்கு!
நாங்கள் கேட்பது அமைதி! வேண்டுவது நீதி!
எமக்கு வேண்டும் தமிழீழம்!
எனப் பல்வேறுபட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அருட்தந்தை கருணாரட்னம் மற்றும் மூன்று குருமார்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட செய்தியையும் மடு மாதா கோயில் எறிகணைத் தாக்குதலில் சேதப்படுத்தப் படம், புனித ஆலய வளாகத்தில் சீருடையில் சிங்கள இராணுவம் நிற்கும் படம் மற்றும் மடு மாதா ஆலய வளாகத்தை விட்டு சிங்கள இராணுவம் வெளியேற வேண்டும், ஆலய வளாகத்தை அண்டிய நிலப்பரப்பு அமைதி வலயமாக அறிவிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் அடங்கிய துண்டு வெளியீடு கனடிய மக்களுக்கு வழங்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அருட்தந்தை கருணரட்ணம் அடிகளாரின் உடன்பிறப்பு திருமதி மார்க்கிறட் வரதராசா, திருச்செல்வம், (ஆசிரியர், தகவல் மாத இதழ்), நக்கீரன் (தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்) மற்றும் பலர் உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களைப் பாராட்டிப் பேசிய நக்கீரன், "ஆர்ப்பாட்டத்துக்கு குறுகிய கால அவகாசத்தில் அனுமதி வழங்கியதோடு போற்றத்தக்க முறையில் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய 53 ஆவது பிரிவு காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார். அத்தோடு ஆர்ப்பாட்டத்தினை நல்ல முறையில் விளம்பரம் செய்த தமிழ் கனடிய வானொலி, தமிழ்த் தொலைக்காட்சி, தமிழ் - 01 தொலைக்காட்சி, "ஈழமுரசு" வார ஏடு ஆகியவற்றுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
கனடிய தமிழ் கத்தோலிக்க மக்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் ஆதரவு வழங்கியது.






