முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளைக் கோட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலின் முத்தமிழ் கலையரங்கம் நிகழ்வு நேற்று முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வு முள்ளியவளைக் கோட்ட வானொலி மன்றத் தலைவர் மாசிலாமணியின் தலைமையில் நேற்று சனிக்கிழமை இரவு 7:30 மணியளவில் தொடங்கின.
நிகழ்வில் பொதுச்சுடர்களை முள்ளியவளைக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் மு.உமைநேசன், சிறப்பு வேவுப் பிரிவுத் தளபதிகளில் ஒருவரான தீபக், ஒட்டுசுட்டான் வானொலி மன்றத்தலைவர் வ.பரமேஸ்வரன் ஆகியோர் ஏற்றினர்.
பொதுமாவீரர் படத்துக்கான ஈகைச்சுடரினை மாவீரர் வேங்கையனின் உடன்பிறப்பு அகிலா ஏற்ற, மலர்மாலையினை வீரவேங்கை கலாவின் உடன்பிறப்பு சுபாஸ் சூட்டினார்.
வரவேற்புரையினை முள்ளியவளைக் கோட்ட வானொலி மன்றச் செயலாளர் ச.சகீலா நிகழ்த்தினார்.
தலைமையுரையினை முள்ளியவளைக் கோட்ட வானொலி மன்றத் தலைவர் மாசிலாமணி நிகழ்த்தினார்.
வரவேற்பு நடனத்தினை முள்ளியவளை நுண்கலைக்கல்லூரி மாணவிகள் நிகழ்த்தினர்.
தொடர்ந்து கலை நிகழ்வுகள் நடைபெற்றது.
சிறப்புரையினை தமிழீழ நுண்கலைக் கல்லூரிப் பொறுப்பாளர் தணிகைமாறன் நிகழ்த்தினார். சமகால அரசியல் கருத்துரையினை புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் நிகழ்த்தினார்.
முள்ளியவளைக் கோட்ட முத்தமிழ் கலையரங்க நிகழ்வை முன்னிட்டு பாடசாலைகள் மற்றும் கழகங்கள் இடையே நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கான சான்றிதழ்கள், பரிசில்கள் வழங்கப்பட்டன.
முதலில் பாடசாலைகளுக்கு இடையே நடைபெற்ற கரப்பந்தாட்டப் போட்டியில்
முதலாம் இடத்தினை முள்ளியவளை கலைமகள் வித்தியாலயமும்
இரண்டாம் இடத்தினை முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியும்
வலைப்பந்தாட்டப் போட்டியில் முதலாம் இடத்தினை முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியும்
இரண்டாம் இடத்தினை சிலாவத்தை தமிழ் வித்தியாலயமும்
துடுப்பாட்டப் போட்டியில் முதலாம் இடத்தினை முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியும்
இரண்டாம் இடத்தினை கலைமகள் வித்தியாலயமும்
பெற்றுக்கொண்டன.
கழகங்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் வலைப்பந்தாட்டப் போட்டியில் முதலாம் இடத்தினை மாமூலை விண்ணொளி விளையாட்டுக்கழகமும், இரண்டாம் இடத்தினை வற்றாப்பளை மங்களேஸ்வரா வித்தியாலயமும் பெற்றுக்கொண்டன.
விளையாட்டுப் போட்டியில் பங்கு கொண்டோருக்கான பரிசில்களையும் சான்றிதழ்களையும் புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன், முள்ளியவளைக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் மு.உமைநேசன், சிறப்பு வேவுப் பிரிவுத்தளபதிகளில் ஒருவரான தீபக், மகளிர் கலை பண்பாட்டுக் கழகத்தின் "சங்கநாதம்" நெறியாளர் கலையரசி ஆகியோர் வழங்கி மதிப்பளித்தனர்.
முத்தமிழ் கலையரங்க நிகழ்வில் பங்கு கொண்ட கலைஞர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இவர்களுக்கான சான்றிதழ்களை முள்ளியவளைக் கோட்ட கல்விக்கழகப் பொறுப்பாளர் பூங்குன்றன், ஓவியர் ராஜன், முள்ளியவளைக் கோட்ட மாணவர் அமைப்புப் பொறுப்பாளர் இலக்கியன், முள்ளியவளைக் கோட்ட வானொலி மன்றத் தலைவர் மாசிலாமணி, தமிழீழ நுண்கலைக் கல்லூரிப் பொறுப்பாளர் தணிகைமாறன் ஆகியோர் வழங்கி மதிப்பளித்தனர்.
சிறப்பு நிகழ்வாக கலையரசி ஆசிரியரின் "சங்கநாதம்" நிகழ்வு நடைபெற்றது.
நன்றியுரையினை முள்ளியவளைக் கோட்ட வானொலி மன்றச் செயலாளர் ச.சகீலா வழங்கினார்.








