ஆனையிரவை கைப்பற்ற படையினர் போரை ஆரம்பித்தால் அது யாழ்ப்பாணத்தை படையினர் இழப்பதற்கான போராக மாறும் என வடபோர் முனை கட்டளைத்தளபதி கேணல் தீபன் தெரிவித்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை முகமாலை களமுனைப்போராளிகளுக்கு கிளிநொச்சி மக்களினால் சமைத்த உணவு,உலர் உணவு உலர் உணவு ஆகியனவற்றை வழங்கிய நிகழ்வில் கலந்துகொண்ட நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு உரையாற்றுகையில்:
“கடந்த 23ஆம் திகதி எமது போராளிகள் முகமாலை முன்நகர்வை முறியடித்த வெற்றிக்களிபோடு இங்கு வந்துள்ளீர்கள்.இதனையிட்டு போராளிகள் மகிழ்ச்சியடைகின்றனர்.நிறைவடைகின்றனர்.
இலங்கை படைத்தளபதி சரத்பொன்சேகா பாரிய வீரசபதம் ஒன்றை மொழிந்துவிட்டு இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்படாத படை நடடிவக்கையொன்றை தொடர்ந்தார்.
கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரை படைநடவடிக்கை செய்;து ஆனையிறவை மீட்க களத்தில் குதித்தனர்.
சரத்பொன்சேகாவின் பாரிய வீரசபதம் படையினருக்கு பெரும் தோல்வியை பெற்றுக்கொடுக்கபோகின்றது என நான் போராளிகளுக்கு கூறினேன்.
களத்திலும் எதிரிக்கு எங்களது பதிலை காட்டினோம்.அன்றைய வெற்றிக்கான காரணம் தமிழீழ தேசிய தலைவரின் திட்டமிடலும் வழிகாட்டலும் தான்.அத்துடன் களத்தில் நின்ற போராளிகளினதும் தளபதிகளினதும் அர்ப்பணிப்பும் எமது மக்களினது பின்தள பங்களிப்பு ஊடாகவும் தான் இந்த வெற்றியை பெற்றெடுத்தோம்.
முகமாலை தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் எல்லா பிரதேசங்களிலும் இருந்து வருகை தந்த மக்களின் பங்களிப்பு ஊடாகவும் மக்கள் களமுனை போராளிகளுக்கு உலர் உணவு வழங்கி உற்சாகப்படுத்தியதன் ஊடாகவுமே வெற்றியை பெற்றோம்.
சரத்பொன்சேகாவின் அறிக்கையின் பின்னர் கிளிநொச்சிக்கு படையினர் வந்துவிடுவார்களோ என்ற அச்சம் மக்கள் மனதில் இருந்தது.ஆனால் களமுனை போராளிகளினது ஒவ்வொருவரினது மனதிலும் ஒரு அங்குல நிலமேனும் எதிரியின் கையில் விழக்கூடாது என்ற உறுதியுடன்தான் களத்தில் போராடினர்.
இந்த உறுதியுடனும் 25க்கும் அதிகமான மாவீரர்களின் அர்ப்பணிப்புடனும் தான் முகமாலை களத்தில் நாம் வெற்றியை பெற்றோம்.
சிறிலங்காப் படையினர் 10:30 மணி நேரமாக எறிகணை, டாங்கி, வானூர்தித் தாக்குதல்களை தீவிரமாக நடத்தினர். இவற்றுக்கு மத்தியில்தான் எமது போராளிகள் போராடினர்.
இந்தக் களத்தில் சிறிலங்காவின் 53 ஆவது, 55 ஆவது டிவிசன் ஆகிய இரண்டு படைப்பிரிவுகளைச் சேர்ந்த 5,000-க்கும் அதிகமான அனுபவம் பெற்ற படையினர் களம் இறக்கப்பட்டனர்.
ஒரே நேரத்தில் படையினர் தாக்குதலை மேற்கொண்டனர். அதனை எமது போராளிகள் தீவிரமாக எதிர்த்து நின்று களமாடி வெற்றி பெற்றனர்.
சிறிலங்காப் படை நினைப்பது போன்று ஆனையிறவை இலகுவில் பிடித்துவிட முடியாது. சிறிலங்காப் படை ஆனையிறவுக்கான போரைத் தொடருமானால், அது யாழ்பாணத்தை படையினர் இழப்பதற்கான போராக மாறும்.
அதுதான் நடக்கப் போகின்றது. அவர்கள் கவசப் படைப்பிரிவை உருவாக்கியுள்ளனர். அந்தப் படைப் பிரிவுதான் ஆனையிறவை நகர்ந்து பிடிப்பதற்கான சிறிலங்காப் படையினரின் நம்பிக்கை நட்சத்திரமும் கூட.
படை நடவடிக்கைக்கு இறங்க முன்னதாக கடந்த மாதம் 22 ஆம் நாள் நாங்கள் கவசப் படைப்பிரிவின் இரு டாங்கிகளை அழித்து ஒரு செய்தியை அவர்களுக்கு கொடுத்தோம்.
இருந்தும் 23 ஆம் நாள் அந்த கவசப்படையணியும் தாக்குதலில் பங்கு கொண்டது. அதில் ஆறுக்கும் அதிகமான கவசப்படையின் கலங்கள் அழிக்கப்பட்டன.
சிறிலங்காப் படையினர் மீண்டும் கவசப்படையை பயன்படுத்தி தாக்குதலை தொடர்வார்களானால் அந்தப் படையணி சின்னாபின்னமாக்கப்படும்.
அது சிலவேளை விடுதலைப் புலிகளின் கவசப்படை பலமாக உருவாகுவதற்கான நடவடிக்கையாக மாறும், அதனை நாங்கள் மாற்றுவோம்.
தற்போது சிறிலங்காப் படையினர் படை நடவடிக்கை தொடர்ந்தால் கூட அதனை நாம் எதிர்கொள்ளத் தாயாராக உள்ளோம். எதிரி நினைப்பது போன்று முகமாலைக் களமுனையில் எதனையும் செய்துவிட முடியாது. அதற்கு மக்களின் முழுப்பங்களிப்பும் உதவியும் தொடர்ந்தும் இருக்க வேண்டும்.
ஆனையிறவுக்கான சிறிலங்காப் படையின் படை நடவடிக்கை முடிந்து விட்டது என நினைத்து விடக்கூடாது. இது ஆரம்பமாகத்தான் உள்ளது.
சிறிலங்காப் படையினர் பல முனைகளில் வன்னியை ஆக்கிரமிக்கும் படை நடவடிக்கையைத் தொடர்ந்த வண்ணம் உள்ளனர்.
ஆனால் சிறிலங்காப் படையினர் இன்று தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் போட்ட தந்திரோபாயத் திட்டத்துக்குள் சிக்குப்படத் தொடங்கியுள்ளனர்.
சண்டைக்கள நிலவரம் மாறும். அதனை விடுதலைப் புலிகள் மாற்றுவார்கள். மக்களின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்க வேண்டும். பின்தள உதவிகள் களத்தில் சீராக கிடைக்க வேண்டும். எல்லோரும் சேர்ந்து போராடினால்தான் வெற்றியைப் பெறலாம்.
இந்தக் காலகட்டத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் கரத்தை வலுப்படுத்துவதன் மூலம் வெற்றியை நாம் பெற்றுக்கொள்ள முடியும் என்றார் அவர்.