கிழக்கு மாகாணம் மீண்டும் ஆயுதக் குழுவிடம் செல்வதை தடுத்து நிறுத்தி கிழக்கு மக்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக மூன்று முஸ்லிம் எம்.பி.க்கள் தமது பதவிகளை ராஜினாமா செய்து களத்தில் குதித்துள்ளனர். தேர்தலில் கிழக்கு மாகாண சபையினை நாம் கைப்பற்றுவது உறுதி என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான மாபெரும் பிரசாரக் கூட்டம் இன்று மாலை அம்பாறை நகரில் நடைபெற்றபோது இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் தயா கமகே தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ருக்மன் சேனாநாயக்க எம்.பி., லக்ஸ்மன் செனவிரத்ன எம்.பி. மற்றும் வேட்பாளர் ஐ.எல்.எம். மாஹீர் உட்பட பலரும் கலந்துகொண்டதுடன், பெருமளவு மக்களும் திரண்டிருந்தனர்.
இக்கூட்டத்தில் தொடர்ந்து பேசிய ரணில் விக்கிரமசிங்க கூறியதாவது: 13 ஆவது அரசியல் திருத்தத்தின் மூலம் மாகாண சபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டுமென்று நாம் கூறியபோது, அப்போது எமது அரசுக்கெதிராக மஹிந்த ராஜபக்ஷ எதிர்ப்புத் தெரிவித்து ஊர்வலம் நடத்தினார்.
இவ்வாறு செய்த மஹிந்த தற்போது அமையவிருக்கும் கிழக்கு மாகாண சபைக்கு இவ் அதிகாரங்கள் வழங்கப்படுமென்று பறைசாற்றிக் கொண்டிருக்கிறார். இதனை ஏற்றுக்கொள்ள முடியுமா? எமது கட்சியின் முயற்சியெல்லாம் ஆயுதக் குழுவிடமிருந்து கிழக்கை மீட்பதன் மூலம் ஒரு பொதுத் தேர்தலொன்றுக்கு இட்டுச் செல்லவதேயாகும். யார் எதனைக் கூறினாலும் கிழக்கை நாம் கைப்பற்றுவது உறுதி. கிழக்கின் உதயம் என்று கூப்பாடு போடும் அரசு கிழக்கில் எதனை சாதித்துள்ளது என்பது மக்களுக்கே தெரியும். தற்போது வாக்குப் பிச்சை கேட்டு அமைச்சர்கள் பட்டாளம் அம்பாறையின் மூலை முடுக்கெல்லாம் மண்டியிட்டுக் கொண்டிருக்கின்றது.
கிழக்கை முழுமையாக மீட்பதென்றால், மட்டக்களப்பு உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்பே பிள்ளையான் குழுவிடமிருந்த ஆயுதம் கலையப்பட்டிருக்க வேண்டும். அதுவும் செய்யப்படாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசு வரிந்து கட்டிக்கொண்டு நிற்பதால், நீதியான, நேர்மையான தேர்தல் நடக்க வழி ஏற்படுமா? இந்த தேர்தலில் அரசாங்கத்திற்கு தகுந்த பாடத்தினை மக்கள் கற்பிப்பார்கள். மேலும், நாளாந்தம் பொருட்களின் விலையேற்றத்தால் ஏற்படும் சுமையை மக்களால் சுமக்க முடியாதுள்ளது.
அதுமட்டுமன்றி, மட்டக்களப்பில் ஐக்கிய தேசியக் கட்சி பிரசாரக் கூட்டம் கூட நடத்த மாநாகர சபை அனுமதிக்கவில்லை. இது எந்த வகையில் நியாயம்? இந்நிலையில் கிழக்கை அவர்களுக்கு ஒப்படைத்தால் எமது நிலை என்னவாகும்