ஜெயந்தன் படையணியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று மட்டக்களப்பு மாவட்ட சிறப்புத் தளபதி கீர்த்தி விளக்கமளித்துள்ளார்.
ஜெயந்தன் படையணியின் படைத்தளத்தில் பெரும் எழுச்சியுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அப்படையணியின் 16 ஆவது அகவை காணும் நிகழ்வில் சிறப்புரையாற்றிய போது சிறப்புத் தளபதி கீர்த்தி மேலும் தெரிவித்துள்ளதாவது:
இதுவரையில் 1,580 மாவீரர்கள் தங்கள் இன்னுயிரை ஈர்ந்து ஜெயந்தன் படையணிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். அவர்கள் தமிழீழ மண்ணிற்காக களமாடி வீரவரலாறாகி உள்ளனர்.
ஜெயந்தன் படையணி அடுத்து என்ன செய்யபோகின்றது?, ஜெயந்தன் படையணி இன்னும் களமிறங்கவில்லையா? என்ற கேள்விகள் எல்லோரிடமும் உண்டு. இக்கேள்விகள் எமது மக்கள் மத்தியில் மட்டுமல்லாது பல நாடுகளிலும் கேட்கப்படுகின்றன.
இக்கேள்விகளுக்கு காரணம் உள்ளது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களையும் ஒட்டுக்குழுவினரையும் சேர்த்து ஒரு பித்தலாட்டம் ஆடிக்கொண்டிருக்கின்றது. இதற்கு நாம் விரைவாகப் பதில் சொல்வோம்.
பிள்ளையான் என்னும் விளக்கமில்லாத ஒட்டுக்குழுவை வைத்து சிறிலங்கா அரசு தமிழ் மக்களையும் அனைத்துலக நாடுகளையும் பேய்க்காட்டிக்கொண்டு இருக்கின்றது.
அதனை இலகுவாக எதிர்கொள்ள வகையில் ஜெயந்தன் படையணி தயாராகிக் கொண்டிருக்கின்றது. அதனைப் போராளிகள் செய்து தீருவார்கள். ஜெயந்தன் படையணி பல வீரஞ்செறிந்த வரலாற்றினை கொண்டு வளர்க்கப்பட்டு வந்தது.
படையணியிடம் சண்டை என்று சொன்னவுடன் அதை விரும்பியேற்று எதிரியைப் பந்தாடி வீரவரலாறாய்ப் போன வீரர்களால்தான் இது வளர்க்கப்பட்டது.
இந்நிகழ்வை சிறப்பாகச் செய்யவேண்டும், இந்நிகழ்வுக்காக செயல் வடிவம் கொடுத்து வருவோம் எனக்கூறி உழைத்த எமது லெப். கேணல் பாரதிராசும், கப்டன் அனுயனும் கூட வீரவரலாறாகிப் போனார்கள்.
ஜெயசிக்குறு களமுனையில் பல லெப். கேணல்களை இழந்துதான் இப்படையணி வரலாறு பதித்துள்ளது.
படையணியின் முழக்க வசனத்திற்கு ஏற்ப, படையணியின் மாவீரர்கள் விட்டுசென்ற பணியையும், மாவட்டத்திற்கு செய்யவேண்டிய முக்கிய பணியையும், ஒட்டுமொத்தமாக தமிழீழத்திற்கு செய்யவேண்டிய பணியையும் நிச்சயமாக நாம் செய்து முடிப்போம். எதிர்காலத்தில் சாதனை படைப்போம் என்பதில் உறுதியாக உள்ளோம் என்றார் அவர்.