மன்னாரில் விடுதலைப் புலிகளுடன் நேடிரத் தொடர்புள்ளவர்கள், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள், விடுதலைப் புலிகளிடம் ஆயுதப் பயற்சிபெற்றவர்கள் உடனடியாக அருகிலுள்ள இராணுவ முகாம்களில் சரணடையுமாறு இராணுவத்தினர் சுவரொட்டிகளை ஒட்டியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னார் நாணாட்டான் பகுதியிலேயே இவ்வாறான சுவரொட்டிகள் இராணுவத்தினரால் ஒட்டப்பட்டிருப்பதாக மன்னார் பிராந்தியச் செய்திகள் கூறுகின்றன.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 10 நாட்களுக்குள் அருகிலுள்ள இராணுவ முகாமில் சரணடையுமாறு அந்தச் சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.
முள்ளிக்குளம், சிலாவத்துறை போன்ற பகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது அந்தப் பகுதியிருந்த பொதுமக்களுக்கு ஆயுதப் பயற்சிகள் வழங்கப்பட்டிருந்ததாகவும், அங்கு இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து இடம்பெயர்ந்த மக்கள் நாணாட்டான் பகுதியில் அமைந்திருக்கும் முகாம்களில் தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவ்வாறு அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம் பகுதிகளிலேயே சரணடையுமாறு கோரி இராணுவத்தினரின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
எனினும், எவ்வாறு சரணடைவது, சரணடைபவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்படுமா அல்லது அவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கப்படுமா என்பது பற்றி எந்தவிதமான தகவல்களும் அந்தச் சுவரொட்டியில் குறிப்பிடப்படவில்லையெனவும், இதனால் குறிப்பிட்ட சுவரொட்டி தொடர்பாக மக்கள் மத்தியில் ஒரு குழப்பநிலை தோன்றியிருப்பதாகவும் மன்னார் பிராந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதை இராணுவத்தினர் ஏற்றுக்கொண்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவலொன்று வெளியாகியுள்ளது.