தேர்தல் வன்முறைகளில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டப்படும் பிள்ளையான் குழுவினரின் ஆயுதங்களை உடனடியாகக் களைவதற்கான உத்தரவை பொலிஸ்மா அதிபர், தேர்தல்கள் ஆணையாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு வழங்க வேண்டுமெனக் கோரி நீதியான, சுதந்திரமான தேர்தலுக்கான பிரசார அமைப்பு உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென சட்டத்தரணியும், நீதியான, சுதந்திரமான தேர்தலுக்கான பிரசார அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினருமான சிரிலால் லக்திலக அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல்செய்யப்பட்ட தினத்திலிருந்து சில துணை இராணுவக் குழுக்கள் கடத்தல்கள், படுகொலைகள், அச்சுறுத்தல்கள் போன்றவற்றில் ஈடுபட்டு வருவது குறித்த முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடுகளில் பெரும்பாலானவை பிள்ளையான்குழுவுக்கு எதிரானவை. இந்த முறைப்பாடுகள் குறித்து எதுவித விசாரணைகளும் இதுவரை நடத்தப்படவில்லை என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில்கொண்டு மனுதாரரின் அடிப்படை உரிமைமீறல் மனுவை விசாரித்து எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவிருக்கும் தேர்தலில் ஆயுதக்குழுவினர் ஆயுதங்கள் பயன்படுத்துவதை தடுத்துநிறுத்த வேண்டுமென அந்த அறிக்கையில் மேலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.