மடு தேவாலயப் திருத்தலப் பகுதியை போர் சூன்யப் பிரதேசமாக- சமாதான வலயமாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏட்டுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலின் தமிழ் வடிவம்:
கேள்வி: மடு புனித பூமியை மன்னார் மறை மாவட்ட ஆயரிடம் சிறிலங்காப் படையினர் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது சரியான கருத்தா?
பதில்: இல்லை. இதுவரையில் இல்லை. தற்போது மடு திருத்தலத்தில் எந்தவொரு மதகுருவும் இல்லை. கடந்த சனிக்கிழமை ஆயர் ஒருவர் மடுப் பிரதேசத்திற்கு பயணம் செய்து, திரும்பினார்.
மூன்று மத குருக்கள் மடு புனித பிரதேசத்திற்குச் செல்ல நாம் அனுமதி கோரியுள்ளோம்.
கேள்வி: அப்படியானால் இதுவரையில் ஒப்படைக்கப்படவில்லையா?
பதில்: இதுவரையில் இல்லை. நாம் அங்கு சென்று தேவாலயத்தை பொறுப்பேற்ற பின்னர் அதனைப் பாதுகாப்பது தொடர்பான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
கேள்வி: மத வழிபாடுகளை தொடங்கவும் மத குருமார் திரும்பிச் செல்வதற்கும் எவ்வாறான விடயங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும்?
பதில்: சிறிலங்காப் படையினர் புனிதப் பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டும். அப்பிரதேசத்தை நாம் பொறுப்பேற்றதனைத் தொடர்ந்து சோதனை நடவடிக்கைளை மேற்கொள்ள நேரிடலாம்.
நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் அவை அகற்றப்பட வேண்டும். இவை நிறைவேற்றப்பட்டால் நாம் மீண்டும் திருச்சொரூபத்தை தேவாலயத்திற்கு மீண்டும் கொண்டு வருவோம்.
மருதமடு தேவாலயத் திருவிழாவிற்கு முன்னதாக சிறிலங்காப் படையினர் வெளியேறி மடு தேவாலயப் பிரதேசம் சமாதான வலயமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.
1982 ஆம் ஆண்டு வர்த்தமானியின் அடிப்படையில் மடு தேவாயலப் பிரதேசம் ஒரு புனித பூமியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, படையினரோ அல்லது வேறும் ஆயுதத் தரப்பினரோ குறித்த பிரதேசத்தில் நிலைகொள்ளக் கூடாது.
கேள்வி: தற்போது மோதல்கள் தவிர்க்கப்பட்டுள்ள அதே வலயத்தையா நீங்கள் சமாதான வயமாக குறிப்பிடுகின்றீர்கள்?
பதில்: ஆம். எனினும், இன்னுமும் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
போர் சூன்யப் பிரதேசமாக அப்பிரதேசத்தை அறிவிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை.
ஆயுதம் தரித்த நபர்கள் அப் பிரதேசத்திற்குள் பிரவேசிக்கக்கூடாது. ஆயுதப் போராட்டங்களினால் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படலாம்.
கேள்வி: வழமை போன்று ஓகஸ்ட் மாதம் மருதமடு தேவாலய திருவிழாவை நடத்த முடியும் என நீங்கள் கருதுகின்றீர்களா?
பதில்: ஆபத்துக்கள் எதுவுமில்லை என்றால் நிச்சயமாக திருவிழா நடத்தப்படும். அதற்கு முன்னர் இரண்டு தரப்பினரும் மடு தேவாலயத்தின் புனிதத் தன்மைக்கு உத்தரவாரதம் வழங்க வேண்டும்.
கேள்வி: சாதாரண சூழ்நிலையின் கீழ் அப்பிரதேசத்தில் எவ்வளவு மக்கள் வாழ்ந்தனர்?
பதில்: ஆயிரக்கணக்கான அகதிகள் வசித்து வந்தனர். சிக்கல் மிகுந்த காலப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தேவாலயப் பிரதேசத்தில் அடைக்கலமாகியிருந்தனர்.
கேள்வி: படையினரால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கு முன்னர் எத்தனை பேர் மடு தேவாலயப் பிரதேசத்தில் வசித்தனர்?
பதில்: அந்தச் சந்தர்ப்பத்தில் 6,000 முதல் 8,000 வரையானோர் தங்கியிருந்தனர்
கேள்வி: புனிதப் பிரதேசத்தை மீட்டெடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட படை நடவடிக்கை குறித்து உங்களது கருத்து என்ன? ஏதேனும் தந்திரோபாய முக்கியத்துவம் உண்டா?
பதில்: பாதைகளில் படையினர் முன்னேறியுள்ளனர். மக்களை மீட்டெடுக்கவும், மடு தேவாலயத்தை மீட்டெடுக்கவும் நாம் முயற்சிப்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மடு தேவாலயப் பிரதேசத்தை விடுவிப்பதற்காக படை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டிய நிலை உள்ளதாக நாம் கருதவில்லை.
கேள்வி: மடு தேவாலயப் பிரதேசத்தை புனிதப் பூமியமாக மாற்றுவதற்கு அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்?
பதில்: இந்தப் பிரதேசம் போர் சூன்யப் பிரதேசமாக அறிவிக்கப்பட வேண்டும். சமாதான வலயமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும். அரசாங்கத்திற்கு இதனை உறுதிப்படுத்த முடியுமாயின் சிறிலங்காப் படையினரும் விடுதலைப் புலிகளும் இதற்கு மரியாதை அளிப்பார்கள். இதனைத்தான் நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகள் சமாதான வலயமாக ஏற்றுக்கொள்வார்கள் என உங்களால் உத்தரவாதமளிக்க முடியுமா?
பதில்: ஆம். அவர்கள் மதிப்பளிப்பதாக ஏற்கனவே எமக்கு அறிவித்துள்ளனர். அரசாங்கத்தரப்பு சமாதான வலயத்திற்கு மதிப்பளிக்க வேண்டியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் ஆயர்கள் ஒன்றியம் விடுதலைப் புலிகளை அப் பிரதேசத்திலிருந்து வெளியேறுமாறு கோரியிருந்தது.
விடுதலைப் புலிகள் வெளியேறிதன் பின்னர் மதிப்பளித்து அரசாங்கப் படைத்தரப்பினரும் வெளியேற வேண்டும் என்பதே எமது கோரிக்கை.
படையினரும் வெளியேறினால், இது சமாதான வலயமாக பிரகடனப்படுத்தப்படும்.
இந்தப் பிரதேசம் சட்ட ரீதியாக ஓர் சமாதான வலயமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும். ஆயுதம் தரித்த படையினர் பிரதேசத்தில் நடமாடுவதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நிலைமை மோதல்களுக்கு வழிகோலும் என்றார் அவர்.