வடக்கு - கிழக்கைப் பிரித்து கிழக்கில் சிறிலங்கா அரசாங்கத்தால் நடத்தப்பட்ட தேர்தலையொட்டிய வன்முறைகள் அதிகரித்து வருகின்றன என்று சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு (பவ்ரல்) குற்றம் சாட்டியுள்ளது.
இதுவரை 52 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
நாளை புதன்கிழமை நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சாரப் பணிகள் முடிவடைவதனை முன்னிட்டு தேர்தல் பிரசாரப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
கட்சிகளின் தலைவர்கள் இத்தகைய பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.
எதிர்வரும் 10 ஆம் நாள் சனிக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது.
இத்தேர்தலில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 9,82,771 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 11 உறுப்பினர்களும்,
அம்பாறை மாவட்டத்திலிருந்து 14 உறுப்பினர்களும்,
திருகோணமலை மாவட்டத்திலிருந்து 10 உறுப்பினர்களும்
தெரிவு செய்யப்படுவர். இதனை விட அதிக ஆசனங்களைக் கைப்பற்றும் கட்சிக்கு இரண்டு கூடுதல் ஆசனங்களும் வழங்கப்படும்.
இத்தேர்தலில் 18 கட்சிகள், 56 சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்த 1,342 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.