மியன்மாரில் இயற்கை அழிவு ஏற்பட்டுள்ள போதும் திட்டமிட்டபடி அந்நாட்டிலிருந்து 50 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி இம்மாதம் 17 ஆம் திகதிக்குள் இலங்கை வந்தடையவுள்ளதாக வர்த்தக, சந்தை அபிவிருத்தி, கூட்டுறவு, நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வர்த்தக, சந்தை அபிவிருத்தி, கூட்டுறவு, நுகர்வோர் விவகார அமைச்சில் இன்று பிற்பகல் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அமைச்சர் மேலும் கூறியதாவது:
நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடில்லை. நாளைத் தேவைக்காகவோ அல்லது சிங்கள, தமிழ் புத்தாண்டுக்காகவோ இந்த அரிசியை கொள்வனவு செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
மூன்று கப்பல்களில் மியன்மாரிலிருந்து அரிசி எடுத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் சரியாக அறிவூட்டப்படுவதன் மூலமே அரிசிக்கு அரசு விதித்துள்ள விலைக்கட்டுப்பாட்டின் பலன்கள் அவர்களைச் சரியாகப் போய்ச் சேரும்.
தற்போது அனேகமான சில்லறை வியாபாரிகள் உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாகவே நெல்லைக் கொள்வனவு செய்து வருகின்றனர். அரிசி கையிருப்பில் இல்லை எனக் கூறும் நிறுவனங்கள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவியுங்கள். அத்துடன், தரம் குறைவான அரிசியை சிலர் விற்பனை செய்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறு விற்பனை செய்வது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் பிரகாரம் தண்டனைக்குரிய குற்றமாகும். இவ்வாறான குற்றச் செயல்களைக் கண்டுபிடிக்க திடீர் சுற்றிவளைப்புக்கள் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேவேளை, மியன்மாரில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்திற்கு இலங்கையினால் முடியுமான உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.