கிழக்கில் உள்ள துணைப்படை ஆயுதக்குழுக்களின் துப்பாக்கிகள் அரசாங்கத்திற்கு எதிராக என்றோ ஒருநாள் திரும்பும் என்பதனை உறுதியுடன் கூறுகின்றோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் பேசியதாவது:
முகமாலையில் படை நடவடிக்கை தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றது.
இத்தகைய படை நடவடிக்கையில் மாதாந்தம் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்படுகின்றனர். முகமாலையில் படையினர் பின்னடைவைச் சந்தித்தமைக்கு அரசியல் நிகழ்ச்சி நிரலே காரணமாகும்.
அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப படை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாலேயே இத்தகைய பின்னடைவுகள் வருகின்றன.
அரசாங்கம் சட்டத்திற்கு முரணாக ஆயுதங்களை வைத்திருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால் கிழக்கில் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்பவர்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
எனவே கிழக்குத் தேர்தல் முறையாக நடைபெற வேண்டுமாயின் சட்டவிரோத ஆயுதங்கள் களையப்பட வேண்டும்.
படையினரால் மீட்கப்பட்ட கிழக்கில் இன்று ஆயுதக்குழுக்களின் நிர்வாகம் ஏற்படுவதனை அரசாங்கம் விரும்புகிறது. படையினரதும் காவல்துறையினரதும் முகாம்களுக்கு அண்மையில் ஆயுதக்குழுக்களின் முகாம்களை அமைக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக மட்டக்களப்பு நகர், ஏறாவூர், கிரான், செங்கலடி போன்ற இடங்களில் ஆயுதக்குழுக்களின் முகாம்கள் உள்ளன.
இது குறித்து அரசாங்கம் விசாரணை செய்ய வேண்டும்.
இத்தகைய ஆயுதக்குழுக்களால் பல்வேறு வேட்பாளர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். ஆயுதக்குழுக்களின் இந்த துப்பாக்கிகள் அரசிற்கு எதிராக என்றோ ஒருநாள் திரும்பும் என்பதனை இப்போதே உறுதியுடன் கூறுகின்றோம்.
கிழக்கில் உள்ள ஆயுதக்குழுக்களின் இருப்பிடங்கள் மற்றும் செயற்பாட்டு நிலையங்களை பாரிய அச்சுறுத்தலுக்கு மத்தியில் புகைப்படம் பிடித்து வைத்திருக்கின்றோம். இந்த ஆதாரங்களை அடிப்படையாக வைத்து ஆயுதக்குழுக்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.