கிழக்கு மாகாணத்தில் உள்ள சிறிலங்காப் படையினருடன் இணைந்தியங்கும் துணைப் படைக் குழுக்கள் தமது பாதுகாப்பிற்காகவே ஆயுதங்களை வைத்திருப்பதாக அமைச்சர்கள் கூறுகின்றனர். அப்படியானால் சிறிலங்கா அரசாங்கம் கிழக்கை இன்னமும் ஆயுதக்குழுக்களிடமிருந்து முழுமையாக மீட்கவில்லையா என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பியிருக்கின்கிறார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியதாவது:
கிழக்கில் இன்று அரச தரப்பின் பல பிரமுகர்கள் முகாமிட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்திற்கு இதற்கு முன்னர் செல்லாத பலர் இப்போது அங்கே முகாமிட்டுள்ளனர். அரசாங்கம் எதற்காக எரிவாயுவின் விலையைக் குறைத்தது? தேர்தலில் மக்களை ஏமாற்றி வாக்குகளை கவர்வதற்கே எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது.
கிழக்குத் தேர்தல் முடிந்ததும் அரசாங்கம் உணவுப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. போக்குவரத்துக் கட்டணங்களும் அதிகரிக்கவுள்ளது.
அதாவது, மக்களின் வாழ்க்கைச் செலவு இந்த தேர்தலின் பின்னர் அதிகரிக்கப் போகின்றது.
அரிசிக்கு நிர்ணய விலையை அறிவித்த அரசாங்கம் இன்று நாட்டில் பெரும் அரிசித் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியிருக்கின்றது.
அரிசி விநியோகத்தில் ஒரு சீரான ஒழுங்குமுறையை கடைப்பிடிக்க தெரியாததாலேயே இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மிகின் எயார் நிறுவனத்தை மக்களின் பணத்தில் தொடங்கினர்.
இன்று அந்த நிறுவனம் 3,200 மில்லியன் ரூபா நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதுடன், மிகின் எயார் நிறுவனத்துக்காக சிறிலங்கா வங்கி 1.2 மில்லியன் ரூபாவையும், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 650 மில்லியன் ரூபாவையும், லங்கா புத்திர வங்கி 350 மில்லியன் ரூபாவையும் கடனாக வழங்கியுள்ளது என்றார் அவர்.