இலங்கையில் இருந்து இராமேஸ்வரம் வந்தடைந்த அகதிகளில் ஒருவர் முகமூடி அணிந்த ஆயுததாரிகளால் இளம் பெண்கள் கடத்தப்படுவதாகக் கூறி விசனம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை 8 பெண்கள் 14 குழந்தைகள் உட்பட 40 அகதிகள் மன்னாரிலிருந்து புறப்பட்டு தனுஷ்கோடிக் கரையைச் சென்றடைந்துள்ளனர். விசாரணைகளையடுத்து இவர்கள் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் அமலன் (வயது22) என்பவர் கருத்துத் தெரிவிக்கையில் நள்ளிரவு வேளைகளில் முகமூடி அணிந்த ஆயுததாரிகள் துப்பாக்கி முனையில் இளைஞர்கள் மற்றும் யுவதிகளை கடத்திச் செல்கின்றனர். பின்னர் இவர்கள் வீடு திரும்புவதில்லை. இத்தகைய சூழ்நிலைகளில் மக்கள் பாதுகாப்புக்காக காடுகளுக்குள் இடம்பெயர்ந்து வாழ்கின்றார்கள்.
ஒரு வார காலத்தின் முன்னர் என்னையும் கண்ணைக் கட்டிக் கடத்திச் சென்று வீடொன்றினுள் அடைத்துச் வைத்தனர். அங்கு என்னைப் போன்ற பல இளைஞர்கள் இருந்தனர். சிறிது நாட்களின் பின்னர் எம்மில் சிலரை ஒன்றாக நிற்க வைத்து புகைப்படம் எடுத்த பின் விடுவித்தனர். மற்றவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. இவ்வாறான சூழ்நிலைகள் இளம் பெண்களுக்கும் ஏற்படுகின்றது. இதனாலேயே பாதுகாப்புக் கருதி நாம் இங்கு வந்துள்ளோம் என்றார்.