நாட்டில் சமாதான வலயங்களை உருவாக்குவதற்கு பதிலாக தமிழர் பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக உருவாக்குவதிலேயே அரசாங்கம் அதிக அக்கறைகாட்டி வருகின்றது என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
நேற்று தினம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது
தமிழர்கள் பிரதேசத்தை சிங்கள மயமாக்குவதற்கான முயற்சிகளையே அரசாங்கம் விரைவா மேற்கொண்டு வருகின்றது. அந்த பாதைக்கே அரசாங்கத்தை ஹெல உறுமய இழுத்துக் கொண்டு செல்கின்றது. இது நாட்டிற்கு நல்லதல்ல. மடு மாதா தேவாலயம் தொடர்பாக மன்னார் ஆயரின் கருத்து ஒரு சமூகத்தினரின் கருத்தாகும். அவரின் கருத்தை உதாசீனப்படுத்த முடியாது. ஆனால், மன்னார் ஆயரின் கருத்தை ஏற்றுக்கொள்ள கூடாதென ஹெல உறுமய கூறுகின்றது.
மன்னார் ஆயர் அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் நிபந்தனைகளை விதித்துள்ளார். அரசாங்கம் இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டால் புலிகளும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலமாக அப்பிரதேச மக்களின் மனதை வென்றெடுக்க முடியும். மடுமாதா தேவாலயம் பௌத்தர்களின் இடம், திருகோணமலை கோணேஸ்வரம், கீரிமலை நகுலேஸ்வரம் இவையாவும் பௌத்தர்களின் பூமி என்று கூறுவதே ஹெலஉறுமயவின் சித்தந்தமாக இருக்கின்றது. அப்படியாயின் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவவர்களுக்கு இந்த நாட்டில் எந்த இடமும் சொந்தமில்லையா?
தற்போதைய அரசாங்கத்தை ஹெல உறுமயவே பொறுப்பேற்றுள்ளது. அந்த நிலைப்பாட்டில்தான் அது செயற்பட்டு வருகின்றது. சில விடயங்களில் அரசை மிரட்டி பணியவைக்க பார்க்கின்றது. ரவூப் ஹக்கீம் முஸ்லிம் படையணி தொடர்பாக பேசியது குறித்து ஹெல உறுமய எம்.பி. கடுமையாக சாடினார். ஹக்கீம் பேசியதில் எவ்விதமான தவறும் இல்லை. இந்தியாவிலுள்ள படையணிகளில் சகல இனத்தவர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறு ஏன் இங்கு உருவாக்க முடியாது? ஹெல உறுமய போன்ற தீவிரவாத கட்சிகள் அரசாங்கத்தை எங்கோ இழுத்து செல்கின்றன. அந்த பயணம் அபாயகரமானது. அதில் தொடர்ந்து பயணிப்பது நாட்டிற்கு நல்லதல்ல. எனினும் அரசாங்கம் மக்களை ஏமாற்றும் வகையில் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகள் நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. என அவர் தெரிவித்தார்.