மியன்மாரில் பாரிய அழிவை ஏற்படுத் தியுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக இலங்கைக்கான அதன் அரிசி விநியோகம் பாதிக்கப்படலாம் என உலக உணவு ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கும், பங்களாதேஷிற்கும் ஆயிரக்கணக்கான தொன் அரிசியை வழங்குவதென்ற உறுதிமொழியைத் தற்போதைய சூழ்நிலையில் மியன்மாரினால் நிறைவேற்ற முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக உலக உணவுத் திட்டப் பேச்சாளர் போல் ரிஸ்லே தெரிவித்துள்ளார்.
மியன்மாரினால் அரிசியை வழங்க முடியா விட்டால், இந்த இரு நாடுகளிலும் உணவு விநியோகத்துக்கு ஏற்படக்கூடிய பாரிய பாதிப்புக்குறித்துப் பெரும் கவலை எழுந்துள்ளதாகவும் அவர் சென்னார்.
இதேவேளை, மியன்மாரில் ஏற்பட்டுள்ள சூறாவளியைத் தொடர்ந்து மியன்மார் அரசு தனது கையிருப்பில் எவ்வளவு அரிசி உள்ளது, அது தற்போதைய நிலையில் போதுமானதா போன்ற முக்கிய விடயங்களைக் கவனத்தில் எடுக்கவேண்டியுள்ளதால் இலங்கைக்கான உத்தேச ஐம்பதாயிரம் தொன் அரிசி விநியோகம் தாமதமடையலாம் என மியன்மார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இயற்கை அனர்த்தத்தினால் எமது அரிசி சேமிப்பிற்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆராய்ந்த பின்னர் பொருத்தமான முடிவையெடுப்போம்.'' என அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மியன்மாரில் அரிசி உற்பத்தி செய்யப்படும் பகுதிகளே சூறாவளியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசு தனது உள்ளூர் அரிசி உற்பத்தியும், விநியோகமும் குறைவடைந்தமையைத் தொடர்ந்து அரிசிக்காக மியன்மாரையே பெரிதும் நம்பியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது