ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் சர்வாதிகார ஆட்சியை முன்னெடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டமை தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்காத காரணத்தினால் இன்றைய தின அமர்வுகளில் கலந்து கொள்ள எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்திற்கு சென்றிருந்தார். பாராளுமன்றத்தில் இன்றைய தினம் நடைபெறவிருந்த விவாதத்தில் கலந்து கொள்ளும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று 10.30 அளவில் பாராளுமன்றத்திற்கு சென்றுள்ளார்.
பாராளுமன்ற வளாகத்திற்கு சென்ற வேளையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் இன்றைய தினம் மூடப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற அதிகாரிகள் எதிர்க்கட்சித் தலைவரிடம் தெரிவித்துள்ளனர்.
யாரால் பாராளுமன்றம் மூடப்பட்டுள்ளதென ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற அதிகாரிகளிடம் வினவியதாகவும்ää பாராளுமன்ற அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டமை தொடர்பாகவோ அல்லது பாராளுமன்றம் மூடப்பட்டுள்ளமை தொடர்பாகவே இதுவரையில் எவரும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்ற கட்டிடத்தின் கீழ் மாடிக்குச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சர்வாதிகார ஆட்சியை மேற்கொள்வதாகவும் இன்றைய தினம் மூடப்பட்டுள்ளது பாராளுமன்றம் மட்டுமல்ல இந்நாட்டின் ஜனநாயகத்தின் கதவுகளும்தான் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.