கிழக்கில் விடுதலைப்புலிகள் இல்லையென்பது தவறான புரிதல்.கிழக்கில் விடுதலைப்புலிகள் எந்த ரூபத்திலும் இருப்பார்கள்.எந்தவழியாலும் விடுதலைப்புலிகள் கிழக்கு வருவார்கள் என இடி உரைத்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி.
அவசரக்காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தியே இதனைத் தெரிவித்தார்.
ஜெயானந்தமூர்த்தி எம்.பி. தனது உரையில் கூறியவை வருமாறு:
இந்த மாகாணசபைத் தேர்தலைத் தமிழ் மக்கள் என்றோ நிராகரித்து விட்டனர்.
இந்த மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சருக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது. கிழக்கில் வெறும் பொம்மை முதலமைச்சர் ஒருவரை உருவாக்கி அங்கு சிங்களக் குடியேற்றத்தை அரசு மேற்கொள்ளப்போகிறது.
கிழக்கில் கல்லோயத் திட்டம் மூலம் அப்போது சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது கிழக்கில் புலிகள் இருந்ததால் அத்திட்டம் சரிவர நடைபெறவில்லை.
இப்போது அங்கு புலிகள் இல்லாததால் மீண்டும் அக்குடியேற்றத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு தீர்மானித்துள்ளது.
விடுதலைப் புலிகள் கிழக்கில் இல்லை என்று அரசு நினைப்பது தவறு.
புலிகள் எந்த ரூபத்திலும் கிழக்கில் இருப்பார்கள். எந்த வழிகளிலும் புலிகள் கிழக்கிற்கு வருவார்கள்.
இந்தத் தேர்தலில் அரசு படுதோல்வியை எதிர்கொள்ளும். தமிழ் மக்கள் நிச்சயம் அரசை எதிர்த்தே வாக்களிக்கத் தீர்மானித்துள்ளனர். அரசை எதிர்த்து வாக்களிக்குமாறு நாம் மக்களிடம் கேட்டுள்ளோம். மக்கள் அதை ஏற்றுள்ளனர்.
இத்தேர்தலில் வெற்றிபெற்று, அதன் ஊடாக அபிவிருத்தியின் பெயரில் சர்வதேச உதவிகளைப் பெற்று, அந்த உதவிகளை புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தி, புலிகளைத் தோற்கடிக்கலாம் என்று அரசு கனவு காண்கின்றது. அந்தக் கனவு நிஜத்தில் நடக்காது.
அரசியல் ரீதியாக அரசு எந்தவிதமான தந்திரங்களைச் செய்தாலும் யுத்தத்தின் மூலம் புலிகளைத் தோற்கடிக்க முடியாது. ஒருபோதும் போர் மூலம் புலிகளைத் தோற்கடிக்கவே முடியாது.
வன்னியை யுத்தம் மூலம் கைப்பற்ற அரசு முயற்சித்தால் அரசு பெரும் தோல்வியையும் பாரிய இழப்பையும் சந்திக்கும்.
அதேபோல் கிழக்குத் தேர்தல் மூலம் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்று அரசு எண்ணினால் அதுவும் முட்டாள் தனம்தான்.
அரசு கயிறு விடுகிறது
இந்தத் தேர்தலின் ஊடாக கிழக்கில் தமிழ் முஸ்லிம்கள் இடையே இனப்பிரச்சினையை உருவாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்தச் சதித்திட்டத்தில் நமது மக்கள் சிக்கமாட்டார்கள்.
கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்கள் மிகவும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். அவர்களைப் பிரிக்கும் நோக்கில் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக்குவோம் என்று முஸ்லிம்களிடமும், தமிழர் ஒருவரை முதலமைச்சராக்வோம் என்று தமிழர்களிடமும் அரசு கயிறுவிடுகிறது.
எது எப்படி இருப்பினும் இத்தேர்தலில் அரசு படுதோல்வியடைவது நிச்சயம் என்றார் அவர்.