தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் மலையகத்தைச் சேர்ந்த 15 பேர் கொழும்பு பயங்கரவாத தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த 4 தமிழர்கள் கடந்த சனிக்கிழமை கொழும்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழேயே இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இராமசாமி சிவகுமார், வீரநாதன் சுதாகரன், செல்லையா ஜெகதீசன், இரட்ணம் கனகரட்ணம் ஆகிய நால்வருமே கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.
இதேவேளை, கடந்த மாதம் கந்தப்பளை என்ற இடத்தில் கைது செய்யப்பட்ட 6 தமிழ் இளைஞர்களும் தொடர்ந்தும் கொழும்பு பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களைத் தவிர கொழும்பு பயங்கரவாத தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கந்தப்பளையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை பார்வையிடச் சென்ற மனைவியையும் கடந்த சனிக்கிழமை கொழும்பு பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.
மற்றும் வெலிவேரியாப் பகுதியில் கிரேட் வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தைச் சேர்ந்த இராமன் இராஜேந்திரன், பண்டாரவளையைச் சேர்ந்த கே.யோகேந்திரன், லிந்துலையைச் சேர்ந்த தைரியநாதர் லில்லி ஆகியோரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.