தென்னிலங்கை மக்கள் தற்போது அனுபவித்து வரும் அபிவிருத்தித் திட்டங்களின் பலன்களை கிழக்கு மாகாண மக்களும் அனுபவிக்கும் சூழ்நிலை விரைவில் தோற்றுவிக்கப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்திலுள்ள கிண்ணியா, வாகரை மற்றும் லகுகல ஆகிய மூன்று பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுடனான நேரடி செய்தமதி உரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
நேற்று இரவு அலரி மாளிகையில் இருந்து ஒலி, ஒளிபரப்புச் செய்யப்பட்ட இந்த நேரடி செய்மதி உரையாடலில் ஜனாதிபதி தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
தற்போது கிழக்கு மாகாண மக்கள் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புலிகள் இந்த மாகாணத்தை தமது பிடியில் வைத்திருந்த போது மதத்தலைவர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோரை படுகொலை செய்துள்ளனர். மாவிலாறு சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் மூலம் கிழக்கு மாகாணம் முழுவதையும் அரசாங்கம் விடுவித்துள்ளது. இதன்போது இடம்பெயர்ந்த மூதூர் மக்கள் 46 நாட்களுக்குள் மீண்டும் அங்கு குடியமர்த்தப்பட்டனர்.
இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் புலிகளுடன் பல உடன்படிக்கைகளைச் செய்துகொண்ட போதிலும் அவர்களால் அந்த பிரதேசங்களுக்கு நேரடியாகச் செல்ல முடியாத நிலையே காணப்பட்டது. எனினும் தற்போது அவர்கள் சுதந்திரமாக அங்கு சென்று மக்களைச் சந்திக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
பிள்ளையான் குழுவினரிடமிருந்து ஆயுதங்களைக் களையுமாறு கோரும் சிலர் பிரபாகரனிடமிருந்து ஆயுதங்களைக் களையுமாறு தெரிவிக்கவில்லை. சில சந்தர்ப்பங்களில் ஆயுதங்களை வைத்துக்கொண்டு தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தவர்கள் தற்போது ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துள்ளனர்.
இலங்கை ஒற்றையாட்சி நாடாகும். அதனை பல்வேறு கூறுகளாக பிளவுபடுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. ஒற்றையாட்சியை நடத்துவதற்காகவே மக்கள் தனக்கு அதிகாரம் வழங்கியுள்ளனர். தமது ஆட்சியின் பிரதான நோக்கம் மக்கள் அச்சமின்றி சந்தேகமின்றி சுதந்திரமாக வாழும் சூழ்நிலையை ஏற்படுத்துவதாகும்.
கிழக்கு மாகாண மக்களின் தேவைகளை நிறைவேற்றும் காலம் தற்போது பிறந்துள்ளது. இவர்களின் எதிர்கால அபிவிருத்திக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். ஆனால் இதற்கு பொது மக்களின் ஐக்கியம் அவசியமாகும். கிழக்கு மாகாண மக்கள் தற்போது பெற்றுக்கொண்டுள்ள சுதந்திரத்தை மீண்டும் பயங்கரவாதிகளிடம் கையளிக்க முற்படாது தமது பிரதேச உறுப்பினர்களை மாகாண சபைக்கு நியமித்து கிழக்கில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த திடசங்கற்பம் பூணவேண்டும்.
இந்த நிகழ்ச்சியின்போது பொது மக்களின் கேள்விகளுக்கு ஜனாதிபதி பதிலளிக்கையில், கிண்ணியாவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பாலம் இன்னும் 6 மாத காலத்துக்குள் அமைக்கப்பட்டுவிடும். பாணம பிரதேச மக்களின் பிரதான பிரச்சினையாக இருக்கும் சமுர்த்தி வங்கியை 24 மணித்தியாலயங்களுக்குள் அமைத்துக் கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. லகுகல பாடசாலைக்குத் Nவையான ஆங்கில ஆசிரியர்களையும் அங்குள்ள வைத்தியசாலைகளுக்குத் தேவையான உத்தியோகத்தர்களையும் விரைவில் பெற்றுக்கொடுக்கப்படும். வாகரை வரை வழங்கப்பட்டுள்ள மின்சார வசதிகள் எதிர்வரும் 2 மாத காலப் பகுதிக்குள் கதிரவெளி மற்றும் ஈச்சிலம்பற்று வரை விஸ்தரிக்கப்படும். மீன் பிடி வள்ளங்கள் மற்றும் வலைகள் என்பவற்றை இழந்துள்ள வாகரை பிரதேச மக்களுக்கு விரைவில் அவைகள் பெற்றுக்கொள்ளப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நேரடியாகக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த கிண்ணியா பிரதேசவாசி ஒருவர், ஜனாதிபதி தமது பிரதேச மக்களுக்குப் பெற்றுக்கொடுத்த சுதந்திரத்துக்காக நன்றி தெரிவித்தார்.