கிழக்குத் தேர்தல்கள் நெருங்கும் தருணத்தில் அரசாங்கம் பயங்கரவாதத்தையும், வன்முறைகளையும் கட்டவிழ்த்த்து விட்டிருப்பதாக ஜே.வி.பி. குற்றச்சாட்டுகின்றது. ஜனநாயகத்தை உதைத்தெறிந்துவிட்டு சர்வாதிகாரப் போக்குடன் ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வுகளை ஒத்தி வைத்துள்ளதாக ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்திற்கும், பாராளுமன்ற ஜனநாயகத்திற்கும் மதிப்பளிப்பதாகவும் வாரம் தோறும் சமூகமளிப்பதாகவும் மஹிந்த சிந்தனையில் வாக்குறுதியளித்த ஜனாதிபதி தற்போது ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இன்று பகல் கொழும்பு நிபோன் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கிழக்குத் தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அரசாங்கம் பயங்கரவாத மற்றும் வன்முறைகளை பாரியளவில் கட்டவிழ்த்து விடுவதாக ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயங்கள் குறித்து பாராளுமன்றத்தில் ஜே.வி.பி. குரல் கொடுக்கும் என்ற அச்சம் காரணமாகவே பாராளுமன்ற அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
லஞ்ச ஊழல்கள் அரசாங்கத்தில் புறையோடிக் கிடப்பதாகவும் மிஹின் லங்கா நிறுவனம் தொடர்பாக பாராளுமன்றத்தில் ஜே.வி.பி. ஏற்கனவே எதிர்வுகூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடி தொடர்பாக பாராளுமன்ற விவாதமொன்றை ஜே.வி.பி. கோரியிருந்த நிலையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அமர்வுகளை ஒத்தி வைத்ததாகத் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.