பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைத்தமைக்கு விஷேட காரணங்கள் எதுவும் இவ்லை. பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டமையினால் தெரிவுக் குழுக்களின் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்; பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உண்டு. அவ்வதிகாரத்தைப் பயன்படுத்தியே அவர் அதனை ஒத்திவைத்துள்ளார். பாராளுமன்றத்தை ஒத்திவைத்தமைக்கு விஷேட காரணம் எதுவும் இல்லை.
கடந்த 2005ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் திகதி அப்போதிருந்த ஜனாதிபதியால் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட அதுவே முதற் தடவையுமாகும். அதன் பின்னர் மீண்டும் பாராளுமன்றம் ஜனாதிபதியினால் ஒத்திவைக்கப்பட்டது.
இவ்வாறு பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்படுவதால் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடும் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரசார நடவடிக்கைகளை தொடர முடியும். அதேவேளை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதால் பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் நடவடிக்கைகள் ஒருபோதும் ரத்து செய்யப்படப் போவதில்லை.