ஜே.வி.பி. கட்சியின் அதிருப்திக்குழுவின் முக்கிய பிரமுகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவுக்கு ஆதரவாக இன்று புதன்கிழமை நடைபெற்ற மற்றுமொரு கூட்டமும் குழப்பத்தில் முடிவடைந்தது.
விமல் வீரவன்சவுக்கு ஆதரவாக ஜே.வி.பியின் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் சிலர் ஆதரவு தெரிவித்து இன்றைய நாள் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இக்குழப்பம் ஏற்பட்டது.
இம் மாநாட்டில் விமல் வீரவன்சவும் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டதால் பெருமளவிலான ஊடகவியலாளர்கள் மாநாடு நடந்த இடத்தில் திரண்டிருந்தனர். எனினும் அவர் வரவில்லை.
மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் என மொத்தம் ஏழு பேர் மட்டுமே மாநாட்டில் கலந்து கொண்டனர்.
ஜே.வி.பி. தலைமைக்கு எதிராக அங்கு குழுமியிருந்தவர்கள் கருத்துத் தெரிவித்துக் கொண்டிருந்த போது திடீரென, மெதகம பிரதேச சபை உறுப்பினர் மொகமட் லெப்பே கியாஸ் ஜே.வி.பி. தலைமைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.
இதனால் ஊடகவியலாளர் மாநாட்டில் குழப்பம் ஏற்பட்டது. விமல் வீரவன்சவுக்கு எதிராக மொகமட் லெப்பே கியாஸ் தொடர்ந்தும் கருத்து தெரிவித்துக் கொண்டிருந்தார். அத்துடன் பிழையான தகவல்களை வழங்கியே தன்னை இங்கு அழைத்து வந்தனர் என்றும் அவர் கூறினார்.
இதனையடுத்து அங்கு முறுகல் நிலை தீவிரமடைந்தது. அவர் ஊடகவியலாளர் மாநாடு முடிவடையும் வரை அங்கேயே இருந்தவாறு விமல் வீரவன்சவுக்கு எதிராக கருத்து தெரிவித்து விட்டு, ஊடகவியலாளர் மாநாடு முடிவடைந்ததும் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறி வீதிக்கு வந்ததும், அங்கே நின்ற இரண்டு பேர் அவரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
விமல் வீரவன்சவுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய கூட்டத்திலும் இத்தகைய குழப்பம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.