தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைக்கு அமைவாக எமது மாணவர்கள் அறிவியல்துறையில் வளர வேண்டும் என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற தமிழீழ மாணவர் அமைப்பின் வெளியீடான "கடுகு" மாத சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வில் சிறப்புரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இன்று மகிழ்ச்சியான நாள். இந்த போர்க்கால சூழ்நிலையில் எமது மாணவர்களின் நலன் கருதி, எமது மாணவ சமுகத்தின் நலன் கருதி "கடுகு" என்னும் நூல் வெளியிடப்படுவது மாணவர்களாகிய உங்களுக்குப் பெரிதும் பயனளிக்கும்.
சிறிலங்கா அரசு எமது தாயகக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளேயே நின்று எமது வளங்களுக்குப் பல தடைகளைப் போட்டு வருகின்றது. மாணவர்களுக்குத் தேவையான பாடசாலைப் பொருட்கள் வருவதற்கு பெரும் கட்டுப்பாடுகள் உள்ளன. புத்தகங்கள் என்பனவற்றையும் தொழில்நுட்பக் கருவிகளையும் கொண்டு வருவதற்கு சிறிலங்கா அரசு தடை விதித்துள்ளது.
எமது இனத்தின் பலமான சக்தியாக மாணவர்கள் உள்ளனர். இந்த மாணவர்களின் வளர்ச்சிக்கு தடைகளைப் போடுவதில் சிறிலங்கா அரசு முனைப்புக்காட்டி வருகின்றது. அது மட்டுமன்றி பல முனைகளில் எதிரியானவன் எமது மண்ணை நோக்கி முன்னேற முயற்சி செய்கின்றான். சிங்களப் பேரினவாதம் தமிழினத்தை நோக்கி துப்பாக்கிகளை நீட்டியவாறு உள்ளது.
ஜம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழினத்தை குறிப்பாக இளைய தலைமுறையை அழிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் சிங்களப் பேரினவாத அரசுகள் செயற்பட்டு வருகின்றன. நீண்டகால செயற்திட்டத்தில் தமிழினத்தை அழிக்கவேண்டும் என்று சிங்கள அரசு செயற்பட்டு வருகின்றது. இது எமக்கு வரலாறு கற்றுத்தரும் பாடமாக உள்ளது.
வரலாறு கற்றுத்தரும் பாடங்களை நாம் கற்கத் தவறுவோமானால் நாம் அளிக்கப்படுவோம். வரலாறு ஊடாகத்தான் எமது விடுதலைப் போராட்டம் உருவாக்கம் பெற்று, இன்று பல் பரிமாணமங்களைப் பெற்றுள்ளது.
ஆரம்பத்தில் எமது கல்வி மீதுதான் சிறிலங்கா அரசின் அடக்குமுறை, ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. எமது தேசிய இனத்தின் பலமான தூண்களாக இருப்பது மாணவர்கள்தான்.
இத்தகைய மாணவர்களை அழிப்பதன் மூலம் தமிழினத்தை அழிக்கலாம் என்ற சிந்தையுடன் சிறிலங்கா அரசு மாணவர்கள் மீதான படுகொலைகளை நிகழ்த்தி வருகின்றது. இன்றைய சூழலில் மாணவர்களுக்கு அறிவியல் ரீதியான வசதிகள் கிடைக்கக்கூடாது என்பதில் சிறிலங்கா அரசு உறுதியாக உள்ளது.
போர்க்கால நெருக்கடியான சூழலிலும் மாணவர்களை நவீன அறிவியல் ரீதியாக வளர்த்துச் செல்ல வேண்டியது அவசியமாகின்றது. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைக்கு அமைவாக உருவாக்கப்பட்டுள்ள எமது கல்வி அமைப்புக்கள் எந்தத் தடைவரினும் மாணவர்களை அறிவியல் ரீதியாக வளர்த்துச் செல்வதில் அக்கறை காட்டும்.
மாணவர் அமைப்பு ஊடாக வெளியிடப்படும் "கடுகு" போன்ற பல நூல்கள் மாணவர்களின் அறிவியல் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்றார்.
கிளிநொச்சி மகாவித்தியாலய முதல்வர் சி.சிறீதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை செஞ்சோலைப் பொறுப்பாளர் சுடர்மகள் ஏற்றினார். தமிழீழத் தேசியக்கொடியை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஏற்றினார்.
மேஜர் முரளியின் திருவுருவப்படத்திற்கு அவரது தாயார் சுடர் ஏற்றி மலர்மாலை சூட்டினார். தியாகி பொன் சிவகுமாரனின் திருவுருவப்படத்திற்கு வன்னி தொழில்நுட்பவியல் நிறுவனப் பணிப்பாளர் சுடர் ஏற்றி, மலர்மாலை சூட்டினார்.
வரவேற்புரையை மாணவி யசேதா நிகழ்த்தினார். வாழ்த்துரைகளை கிளிநொச்சி அன்னை இல்ல இயக்குநர் எட்மன் றெயினோல்ட் அடிகளார், கிளிநொச்சி கல்வி வலயப் பணிப்பாளர் த.குருகுலராசா ஆகியோர் நிகழ்த்தினர்.
"கடுகு" மாத சஞ்சிகையை மாணவி றேணுகா வெளியிட முதல்படியினை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பெற்றுக்கொண்டார்.
சிறப்புப் படியினை "புலிகளின்குரல்" பொறுப்பாளர் நா.தமிழன்பன் பெற்றுகொண்டார். நூல் அறிமுக உரையை விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் நிகழ்த்தினார்.