மட்டக்களப்பில் இருந்து கொழும்பு செல்லும்போது கைதுசெய்யப்பட்ட மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சி கலாசாலையின் ஐந்து ஆசிரியர்களை விடுதலைசெய்யக்கோரி மட்டக்களப்பில் இன்று செவ்வாய்க்கிழமை அமைதிப்பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த 27ஆம் திகதி மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சி கலாசாலையில் பயிற்சி பெற்றுவரும் மட்டக்களப்பு மாவட்டததை சேர்ந்த தில்லைநாதன் பிரேமானந்தன்(30வயது),சுகுமார் ராஜ்குமார்(34வயது),பொன்னையா கமல்ராஜ்(26வயது), சிவலிங்கம் விமலேஸ்வரன்(28வயது),சிதம்பரப்பிள்ளை வில்வராஜா (29வயது) ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் கைதுசெய்யப்பட்டு பத்து நாட்களை கடந்துவிட்டபோதிலும் அவர்களை விடுவிக்க எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாததை கண்டித்தே இந்த அமைதிபேரணி நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை தமது வகுப்புகளை பகிஸ்கரித்த மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சி கலாசாலையில் பயிற்சி பெற்றுவரும் 300க்கும் மேற்பட்ட பயிற்சி ஆசிரியர்கள் இந்த பேரணியில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சி கலாசாலையில் ஆரம்பமான அமைதிப்பேரணி ஊர்வலமாக நகரின் ஊடாக சென்று மாவட்ட செயலகம் வரை சென்று அங்கிருந்து மீண்டும் ஆசிரிய பயிற்சி கலாசாலையை வந்தடைந்ததது.
இந்த பேரணியில் கலந்துகொண்டோர் பல்வேறு வாசகங்களையும் பொருந்திய பதாகைகளை மாணவர்கள் ஏந்தியிருந்தனர்.
‘தமிழ் ஆசிரியர்கள் கொழும்புக்கு வருவதை தடைசெய்யாதே’,’ஆசிரியர்களை துன்புறுத்தாதே.’இ ’அரசே! கைதுசெய்த ஆசிரியர்களை விடுதலைசெய்’.போன்ற வாசகங்கள் பொறித்த பதாகைகளை மாணவர்கள் ஏந்தியிருந்தனர்.