கிழக்கு மாகாண சபைத் தேர்தல் செய்திகளைச் சேகரிக்கச் சென்ற அனைத்துலக செய்தி நிறுவனத்தின் ஊடகவியலாளர்கள் இருவர் அங்கிருந்து சிறிலங்காப் படையினரால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த ரவி நெஸ்மன் என்பவரும் அனைத்துலக ஊடகத்திற்காகப் பணி புரியும் கெமுனு அமரசிங்க என்ற உள்ளுர் ஊடகவியலாளருமே திருப்பி அனுப்பப்பட்டவர்கள் ஆவர்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் செய்திகளைச் சேகரிக்க வேண்டுமானால் பாதுகாப்பு அமைச்சின் சிறப்பு அனுமதியுடன் வருமாறு கூறியே இவர்கள் கிழக்கில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இருவரும் சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பிற்கு செய்தி சேகரிக்கச் சென்றிருந்தனர். கடந்த இரண்டு நாட்களாக அங்கு செய்தி சேகரித்த இவர்கள், இன்று காலை வாழைச்சேனைப் பகுதியில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த சமயம் அங்கு வந்த படையினர், இவர்களை கொழும்புக்கு செல்லுமாறு உத்தரவிட்டனர்.
எதற்காக கொழும்புக்குச் செல்ல வேண்டும் என்று இவர்கள் வினவிய போது, செய்தி சேகரிப்பதாயின் பாதுகாப்பு அமைச்சின் சிறப்பு அனுமதியைக் கொண்டுவர வேண்டும் என்றும் படையினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இது குறித்து சுதந்திர ஊடக இயக்கத்தினர் படைத்தரப்பிடம் உரையாடியுள்ளனர்.
படைத்தரப்பிற்கும் சுதந்திர ஊடக இயக்கத்தினருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்து கிழக்கு மாகாண சபைத் தேர்தல் செய்திகளைச் சேகரிக்க இரு ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.