இலங்கையின் மிக முக்கியமான வருமான வழிகளில் ஒன்றான ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை பெற்றுக் கொள்வது தொடர்பில் அரசாங்கம் மெத்தனப் போக்கை காட்டி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜீ.எஸ்.பீ. பிளஸ் சலுகையை பெற்றுக்கொள்ள அரசியல் பேதங்களை மறந்து செயற்படுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்த ஒப்பந்தம் குறித்து உதாசீனமான போக்கைக் கடைபிடித்த போதிலும் நாட்டின் பொருளாதார நலன்கருதி ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளை எதிர்க்கட்சித் தலைவர் சந்திக்க உள்ளார் எனத் தெரியவருகிறது.
எதிர்வரும் ஜூன் மாதத்துடன் இலங்கைக்கான ஜீ.எஸ்.பீ. பிளஸ் சலுகை ஒப்பந்தம் முடிவடைகின்றது.
லக்வனித அமைப்புடன் இன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டுள்ள சில நிபந்தனைகளை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும் இதனால் ஜீ.எஸ்.பீ. பிளஸ் சலுகை இலங்கைக்கு கிடைக்காமல் போகக்கூடிய அபாயம் நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனித உரிமைகளைப் பாதுகாத்தல், தேசியப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வொன்றைப் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட சில நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாக இலங்கை, ஐரோப்பிய ஒன்றியத்திடம் உறுதியளித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தற்போதைய அரசாங்கம் இந்த நிபந்தனைகளை உதசீனப்படுத்தியுள்ளதாகவும் ஜீ.எஸ்.பீ. பிளஸ் சலுகையை பெற்றுக்கொள்வதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவிவித்துள்ளார்.
ஆடைக்கைத்தொழிலில் ஈடுபட்டுவரும் லட்சக் கணக்கானோர் இதனால் நேரடியாக பாதிக்கப்படலாம் எனவும் இதனால் நாட்டின் பொருளாதாரம் பாரிய பின்னடைவை எதிர்நோக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் முரண்பாடுகளைப் புறந்தள்ளி நாட்டின் பொருளாதார நலனைக் கருத்திற் கொண்டு ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் ஜீ.எஸ்.பி. பிளஸ் நீட்டிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.