08-05-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
மன்னார் மக்கள் படையினரின் இரும்புக்கரங்கள் கொண்ட கடுமையான கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளனர் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த மோர்ணிங் லீடர்" தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கொழும்பைச் சேர்ந்த மதத் தலைவர்கள் சிலர் கடந்த மாதம் ஏப்ரல் 15 ஆம் நாள் முதல் 18 ஆம் நாள் வரையில் மன்னாருக்கான பயணத்தினை மேற்கொண்டிருந்தனர். மன்னாருக்குப் பயணம் மேற்கொண்டிருந்த மதத் தலைவர்கள் குழுவில் மூத்த பௌத்த பிக்கு ஒருவரும், அங்கிலிக்கன், கத்தோலிக்க, மெதடிஸ்த மதகுருமார்களும் உள்ளடங்கியிருந்தனர். மன்னாருக்குப் பயணம் செய்த மதத் தலைவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தனர். மன்னார் நகர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் கடுமையாக இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளன. மன்னார் வீதியின் ஊடாக பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் அனைத்துப் பயணிகளும் மிகக் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன் பதிவும் செய்யப்படுகின்றனர். மன்னார் ஊடாக ஏ-30 வவுனியா வீதி மற்றும் ஏ-14 மதவாச்சி வீதி ஊடாகப் பயணிக்கும் பயணிகள் இந்தக் கடுமையான சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். மன்னார் வீதியின் பல இடங்களிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. மன்னாரிலிருந்து மதவாச்சி செல்வதற்கிடையில் எமது வாகனம் 6 இடங்களில் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. எமது வாகனம் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. எனினும், பேருந்தில் பயணிக்கும் பயணிகள் மிகவும் கடுமையாக சோதிக்கப்படுவதனை நாம் நோக்கக்கூடியதாக இருந்தது. சில மீற்றர்கள் முதல் அரை கிலோ மீற்றர் வரை பேருந்துகள் நிறுத்தப்பட்டு பயணப் பொதிகளைச் சுமந்தபடி சோதனைச் சாவடியில் காத்திருந்த பயணிகளை எம்மால் காணக்கூடியதாக இருந்தது. மன்னார் நகரில் பாரியளவிலான இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்ததையும் நாம் அவதானித்தோம். மதவாச்சி வீதியைப் பாவிப்பது தொடர்பிலான கட்டுப்பாடுகள் இந்த வருட ஆரம்பம் முதல் கொழும்பிலிருந்து மன்னாருக்குச் செல்லும் வாகனங்கள் மதவாச்சி ஊடாக செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மன்னாரிலிருந்து வெளிச்செல்லும் வாகனங்களும் மதவாச்சி ஊடாக செல்வதற்கும் படையினர் அனுமதியளிப்பதில்லை. பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களுக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தும். எனவே, தொடருந்து மூலம் சென்று, நண்பர்களிடம் போக்குவரத்து வசதிகளை ஒழுங்கு செய்யுமாறு கோர பயணிகள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இந்த நிலைமை வயோதிபர்கள், அங்கவீனர்கள் மற்றும் கைக்குழந்தைகளுடன் பயணம் செய்வோருக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தியுள்ளது. நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லும் தொண்டு நிறுவனங்களும் இந்தப் போக்குவரத்து விதிமுறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்குகின்றன. மன்னார் பிரதேசவாசிகளைத் தவிர்ந்த எவரும் உட்பிரவேசிக்க முடியாது கடந்த மாதம் ஏப்ரல் 15 ஆம் நாள் நாம் மன்னார் செல்லும் வழியில் ஓர் மனிதாபிமான தன்னார்வத் தொண்டரைச் சந்தித்தோம். செட்டிக்குளத்தில் வசிக்கும் அவருக்கு மன்னாருக்குச் செல்ல படையினர் அனுமதி வழங்கியிருக்கவில்லை. குறித்த தன்னார்வத் தொண்டு நிறுவனப் பணியாளர் காட்டு அடம்பன் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டிருந்ததனை நாம் அவதானித்தோம். எவ்விதமான அறிவித்தல்களும் இன்றி இவ்வாறான தடைகள் திடீரென விதிக்கப்படுகின்றன. மன்னாரில் வசிப்போரைத் (தேசிய அடையாள அட்டையில் வசிப்பிடம் மன்னார் எனக் குறிப்பிடப்பட்டிருப்போர்) தவிர ஏனையோர் காட்டு அடம்பன் சோதனைச் சாவடிக்கு அப்பால் செல்ல முடியாது எனப் படையினர் குறிப்பிட்டனர். கத்தரிவெயிலில் எந்தவித நிழலும் இன்றி சுமார் இரண்டு மணி நேரம் பல்வேறு தரப்பினருக்கு தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி அனுமதிப் பெற்றுக்கொள்ள நேரிட்டது. மன்னாரில் உள்ள தனது கணவரிடம் செல்ல முடியாது தவித்த ஒரு பெண்ணை நாம் செல்லும் வழியில் சந்தித்தோம். அது மட்டுமன்றி புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பல்வேறு வெளியிடங்களுக்கு சென்று மீண்டும் மன்னார் திரும்பிய பலர் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். மேலும், மாவட்டத்தின் மத்திய மையமாக மன்னார் நகர் கருதப்படுகின்றது. எனவே தொழில் நிமித்தமும், இன்னொரென்ன தேவைகளுக்காகவும் பலர் மன்னார் நகருக்கு நாளாந்தம் வருகை தருகின்றமை தவிர்க்க முடியாத ஒன்றாகும். மதவாச்சி- மன்னார் வீதியில் இவ்வாறு பலர் தமது சொந்தங்களுக்காக காத்திருக்கும் காட்சிகளையும், அனுமதி மறுக்கப்பட்டு மீண்டும் திரும்பிச் செல்லும் காட்சிகளையும் எம்மால் கண்கூடாக அவதானிக்க முடிந்தது. சோதனைச் சாவடியில் கடமையாற்றும் அதிகாரிகள் உயர் அதிகாரிகளின் கட்டளைகளுக்கு அமையவே தமது பணிகளை முன்னெடுப்பதாகவும், இதனால் அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பாக வருந்துவதாகவும் எம்மிடம் தெரிவித்தனர். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு வன்னிப் பிரதேச மக்கள் படகுகள் மூலம் மன்னாருக்கு வரத் தொடங்கியுள்ளனர். ஆரம்ப காலத்தில் படைத்தரப்பினர் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் அனுமதிக்கப்படுவர். சில இளைஞர்கள் மேலதிக விசாரணைளுக்காக தடுத்து வைக்கப்பட்டனர். எனினும் கடந்த மார்ச் மாதம் முதல் இந்த அனைத்து மக்களும் களிமோட்டைப் பிரதேசத்தில் முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். அநேகமானோர் தமது நண்பர்கள் அல்லது உறவினர்களின் வீடுகளில் தங்கியிருக்க அனுமதி கோரிய போதிலும் படையினர் அதற்கு அனுமதியளிக்கவில்லை. விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் என்ன வகையான அணுகுமுறையைப் பின்பற்றுவது என்பது குறித்து படையினருக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்படவில்லை. எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இராணுவ உயர் அதிகாரிகள் அல்லது பாதுகாப்புச் செயலாளரின் கட்டளைகளுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மதவாச்சி ஊடாகப் பயணம் செய்யும் போது பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக தமிழ் மக்கள் மதவாச்சிப் பாதை ஊடாகப் பயணம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. தொடருந்து மூலமாக மாத்திரமே தமிழர்கள் பயணம் செய்யக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் பாம்புகளின் தொல்லை அதிகமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாம் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் ஒரு பாம்பை அடிப்பதை அவதானித்தோம். தொண்டு நிறுவனங்கள் பல உதவிகளை வழங்கியுள்ள போதிலும் தங்கியிருப்போர் கூடாரம் மற்றும் ஏனைய வசதிகளின்றி அல்லலுறுவதாகவே தெரிவிக்கப்படுகின்றது. நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவர் மருத்துவ வசதிகளின்றி அவதிப்படுவதனை நாம் காணக்கூடியதாக இருந்தது. உண்மையில் அவரைப் பராமரிப்பதற்கு மன்னாரில் பல உறவினர்கள் தயாராக உள்ள போதிலும் படையினரின் போக்குவரத்துக் கெடுபிடிகளின் காரணமாக குறித்த கர்ப்பிணிப் பெண் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றார். மேலும், வெளிநாடு செல்வதற்கு எதிர்பார்த்திருக்கும் சிறுவன் ஒருவன் கொழும்பு செல்ல முடியாது தவிப்பதனையும் எம்மால் காணக்கூடியதாக இருந்தது. படையினரின் போக்குவரத்துக் கெடுபிடிகளின் காரணமாக உயர்தரம் மற்றும் பல்கலைக்கழக கல்வியைத் தொடர முடியாத நிலையில் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். ஒரு மணப்பெண் தனது சொந்த திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாத நிலைமையையும் காண நேரிட்டது. ஆசிரியர்கள், அரசாங்கப் பணியாளர்கள் தமது சம்பளப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையும், விவசாயிகள் மற்றும் கடல் தொழிலாளர்கள் தமது நாளாந்த உயிர் வாழ்தலுக்கான தொழிலைத் தொடர முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையின் கீழ் பலர் அரசாங்கத்தின் மீது தமது அதிருப்தியை வெளியிட்டனர். அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் சுமூகமான வாழ்க்கையை தொடர முடியும் என்ற எண்ணத்தில் வன்னியிலிருந்து வந்த மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர். அரசாங்கம் இவ்வாறு ஒரு முகாமில் தடுத்து வைக்கும் என்று தெரிந்திருந்தால் ஒருபோதும் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வருகைத் தந்திருக்க மாட்டோம் என சிலர் எம்மிடம் தெரிவித்தனர். முசலிப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்தோர் நானாட்டானில் அமைந்துள்ள இடம்பெயர்ந்தோர் முகாமிற்கும் நாம் பயணம் செய்தோம். எனினும், களிமோட்டை முகாமைப் போன்றல்லாது இங்கு பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகமாகக் காணப்பட்டன. இதனால் எம்மால் அங்கு தங்கியிருக்கும் மக்களுடன் உரையாடச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. படையினர் முசலிப் பிரதேசத்தில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளின்போது 4,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த இராணுவ நடவடிக்கைகளின் போது படைத்தரப்பிற்கு எந்தவித சேதமும் ஏற்படாத அதேவேளை 12 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சில நாட்களின் பின்னர் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியும் எனப் படையினர் தெரிவித்திருந்த போதிலும் 7 மாதங்களாகியும் தொடர்ந்தும் முகாம்களில் தங்கியிருக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மீன்பிடித் தொழில் மன்னாரில் மீன்பிடித் தொழில் மிகவும் பிரபல்யமான தொழிலாகக் கருதப்படுகின்றது. பேசாலை மற்றும் மன்னாரைச் சேர்ந்த கடல் தொழிலாளர்களை நாம் சந்திக்கும் வாய்ப்பு எமக்குக் கிட்டியது. மீன் பிடித்தொழிலுக்கு மிகவும் உசிதமான இரவு நேர மீன்பிடித் தடை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை பிரதேச கடல் தொழிலாளர்கள் எதிர்நோக்கி வருவதாக அவர்கள் எம்மிடம் முறையிட்டனர். மீனவர்களின் இயந்திரங்களை மாலை 6:00 மணிக்குப் படையினரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், பின்னர் காலையில் படையினரிடமிருந்து குறித்த இயந்திரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 10 முதல் 15 குதிரை வலுவுடைய படகுகளையே மீன்பிடித் தொழிலுக்கு பயன்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறிய சில கடல் தொழிலாளர்களை படையினர் தாக்கியதாகவும் எமக்கு தெரிய வந்தது. விடுமுறைக்குச் செல்லும் கடற்படையினர் மற்றும் முகாம் பாவனைக்காக கடல் தொழிலாளர்களின் சிறந்த ரக மீன்களை பணம் கொடுக்காது படையினரும் எடுத்துச் செல்வதாகவும் தெரியவருகிறது. கடற்படையினரின் உத்தரவிற்கு அமைய காலை நேரத்தில் மீன்பிடித் தொழிலுக்குச் செல்வதினால் குறைந்தளவு மீன்களையே பிடிக்க முடிவதாக மீனவர்கள் குறிப்பிடுகின்றனர். மதவாச்சி ஊடான போக்குவரத்து கெடுபிடிகள் காரணமாக பிடித்த மீன்களை சந்தைப்படுத்துவதிலும் மன்னார், பேசாலை மீனவர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|