சிறிலங்காவின் ஆடை ஏற்றுமதி தொழிலுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக சலுகையைப் பெறுவதற்காக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்க விரைவில் பிரசெல்ஸ் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறியதாவது:
1977 ஆம் ஆண்டு சிறிலங்காவில் ஆடைக் கைத்தொழில்துறை தொடங்கப்பட்டது.
சுமார் 200 தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டதால் வேலையில்லாப் பிரச்சினை தீர்ந்ததுடன் உள்நாட்டு உற்பத்தியும் பெருகியது.
ஒழுங்காக ஆடை அணிய முடியாதிருந்த சிறிலங்காவினர், அனைத்துலகத்திற்காக ஆடைகளை ஏற்றுமதி செய்யத் தொடங்கினர்.
மேலும் அனைத்துலக சந்தைகளுக்குள் சிறிலங்கா இலகுவாக நுழையவும் முடிந்தது.
2002 ஆம் ஆண்டு எனது தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்ட சமாதான நடவடிக்கையால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சிறிலங்காவிடமிருந்து சலுகை அடிப்படையில் தைத்த ஆடைகளை இறக்குமதி செய்ய உடன்பட்டன.
இதனையடுத்து உள்ளுர் உற்பத்திகள் மேலும் அதிகரித்தன.
சமாதான நடவடிக்கையால் தைத்த ஆடைக் கைத்தொழிலை இழுத்து மூடாதிருக்கும் நிலையும், வேலையற்றோர் வீதத்தை அதிகரிக்காதிருக்கும் நிலையும் உருவானது.
அத்துடன் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டதால் சிறிலங்காவின் ஏனைய உற்பத்திப் பொருட்களுக்கும் அனைத்துலக சந்தை வாய்ப்புக் கிடைத்தது.
அனைத்துலக சந்தை வாய்ப்பை உருவாக்கும் கோட்டா அடிப்படையிலான சிறிலங்காவின் ஒப்பந்தம் எதிர்வரும் நவம்பருடன் முடிவடைகின்றது.
எனவே அந்த ஒப்பந்தத்தை நீடிப்பதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2007 ஆம் ஆண்டு ஏற்றுமதி செய்யப்பட்ட தைத்த ஆடைகள் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்பட்டன.
இந்த நிலை நீடிக்க வேண்டும். இதற்காக பிரசல்ஸ் சென்று பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றேன்.
ஆனால் மனித உரிமைகள் குறித்த அனைத்துலகத்தின் குற்றச்சாட்டுகளுக்கு இந்த அரசாங்கம்தான் பதிலளிக்க வேண்டும் என்றார்.