ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபைக்கு சிறிலங்காவை தெரிவு செய்யக்கூடாது என்று மனித உரிமைகள் சபையில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகளுக்கு பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் கடிதம் அனுப்பியுள்ளன.
அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
மனித உரிமைகள் சபையில் இடம்பெறும் நாடுகள் உயரிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று ஐ.நா. சரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறிலங்காவிற்கு அத்தகைய தகுதிகள் இல்லை.
அரசாங்கம் அல்லாத ஆயுதக்குழுவான விடுதலைப் புலிகளை விமர்சிக்கும் அதே நேரத்தில் சிறிலங்கா அரச படைகளின் உரிமை மீறல்களை நியாயப்படுத்த முடியாது.
பாரிய அளவிலான பல்வேறு மனித உரிமை மீறல்களில் சிறிலங்கா அரச படைகள் நேரடியாக ஈடுபட்டுள்ள போதும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த சிறிலங்கா அரசாங்கம் தவறிவிட்டது.
ஐ.நா. மனித உரிமைகள் சபை மற்றும் அதன் கட்டமைப்புகளுக்கு சிறிலங்கா தொடர்ந்தும் ஒத்துழைப்பு அளிக்க மறுத்துவருகிறது.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர், ஐ.நா. உயர் பிரதிநிதிகளான அலன் றொக், ஜோன் ஹோல்ம்ஸ் ஆகியோரை சிறிலங்காத் தரப்பினர் தனிப்பட்ட முறையில் மிகக்கடுமையாக விமர்சித்துள்ளனர்.
மேலும் அவர்களை பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாதிகளுக்கு உதவுவோர் என்றும் சிறிலங்காத் தரப்பு குற்றம் சாட்டியிருக்கின்றது.
சிறிலங்காவை ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு மீளவும் தெரிவு செய்வதானது இலங்கையின் நடைபெற்று வரும் பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து இந்த அனைத்துலக சமூகம் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது என்பதையே வெளிப்படுத்தும்.
ஆகையால் ஐ.நா. உறுப்பு நாடுகள் இதனை கவனத்தில் கொண்டு இலங்கையின் பாரிய மீறல் விடயங்களில் புதிய கவனம் செலுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகம், அனைத்துலக ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு, சரத்து 19 மற்றும் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு ஆகிய அனைத்துலக உரிமைகள் அமைப்புக்களின் சார்பில் இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.